காஷ்மீரில் கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்துக்களைக் குறிவைத்து காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த நிலையில், காஷ்மீர் தாக்குதல்கள் குறித்து சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே விடுத்துள்ள செய்தியில், “கடந்த சில நாள்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்டுகள் மற்றும் இந்துக்கள் குறிவைத்துக் கொலைசெய்யப்படுகின்றனர்.
ஒரே மாதத்தில் காஷ்மீரில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான பண்டிட்டுகள் காஷ்மீரிலிருந்து வெளியேறிவிட்டனர். ஒட்டு மொத்த நாடும் கோபத்தில் இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு மிகவும் கவலையளிக்கும் விதமாக இருக்கிறது. காஷ்மீர் பண்டிட்டுகள் வீடு திரும்பும் கனவுகள் காட்டப்பட்டன.
ஆனால், அவர்கள் வீடு திரும்பினால் அவர்களை அழைத்துச் சென்று கொலைசெய்கின்றனர். இதனால் காஷ்மீர் பண்டிட்டுகள் அதிகமானோர் அங்கிருந்து ஓடிவிட்டனர். இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த இக்கட்டனான சூழ்நிலையில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மகாராஷ்டிரா அரசு உறுதுணையாக இருக்கும். பண்டிட்டுகளுக்கு முடிந்த உதவிகளை செய்யும். 1995-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைத்த போது காஷ்மீர் பண்டிட்டுகளின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்புக்காக பால் தாக்கரே அடிக்கடி குரல் கொடுத்து வந்துள்ளார். தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.