திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே கருணாநிதி சிலை வைப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், சிலைவைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். ஆனால், இம்மாத இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வரவிருப்பதால், அதற்குள் எப்படியாவது சிலையை வைத்துவிட வேண்டும் என்று தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது அமைச்சர் எ.வ.வேலு தரப்பு. இன்னும் வழக்கு முடியவில்லை என்றாலும்கூட, நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வராவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தவர்கள், சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்டிருந்த சிலைக்கான பீடத்தை இரவோடு இரவாக அகற்றிவிட்டனர். கூடவே அந்த இடத்துக்குச் சற்று தள்ளியிருக்கும் தனியார் கட்டடத்தின் ஒரு பகுதியை எப்படியாவது விலைக்கு வாங்கி, அங்கேயாவது சிலையை வைத்துவிட வேண்டும் என்று தீயாக வேலை செய்கிறார்கள். சிலை வந்துவிடக் கூடாது என்று பா.ஜ.க -வினர் சில திரைமறைவு வேலைகளைச் செய்வதால், இதை கௌரவப் பிரச்னையாகப் பார்க்கிறாராம் அமைச்சர்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்களைத் தயாரித்து, 97 லட்சம் ரூபாயைக் கையாடல் செய்த வழக்கில், வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாளர் உமா மகேஸ்வரி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 2018-2019 காலகட்டத்தில் குடியாத்தம் கிளை அலுவலகத்தில் பணிபுரிந்த சமயத்தில் செய்த பண மோசடிக்காகவே இந்தக் கைது நடவடிக்கை. ‘அப்போதே புகார் வந்தது.
அன்றைய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு இருந்ததாலேயே, அப்போது உமா மகேஸ்வரி மீது நடவடிக்கை பாயவில்லையாம். கூடவே, கிளை அலுவலகத்திலிருந்து புரொமோஷன் கொடுத்து, மாவட்ட கூட்டுறவு வங்கியின் மேலாளராக அமர்த்தப்பட்டார்’ என்கிறார்கள் துறைக்குள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாலேயே பழைய புகார் மீண்டும் தூசுதட்டப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் தோண்டினால், நிறைய பேர் சிக்குவார்களாம்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்காக பிரிக்கப்பட்ட தி.மு.க-வின் புதிய மாவட்ட அமைப்புகளை, 2024 தேர்தலையொட்டி மீண்டும் இணைத்துக் குறைக்கப்போவதாக பேச்சு இருந்தது அல்லவா… இப்போது மாவட்டக் குறைப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
கட்சிரீதியாக ஐந்து மாவட்டங்களாகப் பிரிந்துள்ள கோவையில், மூன்று மாவட்டங்களாகக் குறைத்துவிடுவார்கள் என்று பயந்துகொண்டிருந்த சிட்டிங் மாவட்டப் பொறுப்பாளர்கள், கட்சியின் இந்த புதிய முடிவால் குஷியானார்கள். ஆனால், ‘மாவட்டஅமைப்பில்தான் மாற்றமில்லை. மற்றபடி சட்டசபை, உள்ளாட்சித் தேர்தலில் உள்ளடி வேலை பார்த்தவர்கள் மாற்றப்படுவது உறுதி’ என்று சொல்லிவிட்டதாம் தலைமைக் கழகம். இதனால் கோவை, திருப்பூர் மாவட்ட தி.மு.க-வினர் ஆடிப்போயிருக்கிறார்கள்.
ஏற்கெனவே மின்சாரத்துறை முறைகேடு குறித்த ஆவணங்களை வெளியிட்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அடுத்து மேலும் இரண்டு துறைகளின் ஊழல் பட்டியலை வெளியிடப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறார். அவருக்கு எப்படி இந்த ஆவணங்கள் கிடைக்கின்றன… அந்தத் துறைகளில் இருக்கும் கறுப்பு ஆடுகள் யார்… என்று விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறதாம் தி.மு.க. “நிறை இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்… குறை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்…” என்பதுதான் சமீபத்தில் அதிகாரிகளுக்கு ஆட்சி மேலிடம் சொல்லியிருக்கும் ஆலோசனையாம்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தாலும் நியமித்தார்கள் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக, மாற்றுக்கட்சியிலிருந்து வந்த ஒருவருக்கு மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது குறித்த பிரச்னை இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சமூக கோட்டா அடிப்படையிலேயே அவருக்குப் பதவி கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், அவர் தலைமையை மிரட்டியே பதவி வாங்கியிருப்பதாக முணுமுணுக்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.
மாநிலத் தலைமையின் நிழலாக இருப்பவரைச் சந்தித்து, அவர் மூலமாகப் பதவியைப் பெற்றுவிட்டார் என்று இன்னொரு தரப்பு முணுமுணுக்கிறது. மாநிலத் தலைமைக்கு நிழலாக இருப்பவரைச் சந்தித்தால், இங்கே எந்தப் பதவியையும் வாங்கிவிடலாம் என்று விரக்தியாகச் சொல்கிறார்கள் அவர்கள்.
தரத்திலும் சரி… கட்டமைப்பிலும் சரி… அமுல் நிறுவனத்துக்குப் போட்டியாகச் செயல்படும் வல்லமைபெற்றது ஆவின் நிறுவனம். ஆனால் உள்ளே இருப்பவர்களின் ஊழல், முறைகேடுதான் இந்நிறுவனத்தின் காலை வாருகிறது. ஆவின் பொதுமேலாளராக இருந்த ராஜேந்திரன், பணி ஓய்வு நாளான மே 31-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதை ஒரு தரப்பு கொண்டாடினாலும், இன்னொரு தரப்பு கடுப்பில் இருக்கிறது.
ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படும் நடைமுறையை ரத்துசெய்து கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை காற்றில் பறக்கவிட்டதோடு மட்டுமல்லாமல், மே 31-ம் தேதி இரவு 10 மணிக்கு சஸ்பெண்ட் உத்தரவைப் போட்டது ஏன் என்பது அவர்களது கேள்வி. ‘மாலை 5:45 மணியோடு அவர் பணி ஓய்வுபெற்றுவிட்டார். அப்போது வரை அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லையா… அமைச்சரும், துறையின் செயலாளரும் சேர்ந்துதான் ஏதோ உள்நோக்கத்தோடு இந்த அவசர உத்தரவை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்று சொல்கிறது ராஜேந்திரன் தரப்பு.