கேரள முதல்நாள் வசூல் ; விஜய் படங்களுக்கு நடுவே இடம்பிடித்த விக்ரம்
விஸ்வரூபம் 2 படத்தை தொடர்ந்து ஒரு பக்கம் பிக்பாஸ் இன்னொரு பக்கம் அரசியல் என கமல் திசை மாறி விட்டதால் அவர் இனி படங்களில் நடிப்பாரா என்கிற சந்தேகம் அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டது. அந்த வகையில் நான்கு வருடம் கழித்து கமல் நடிப்பில் விக்ரம் படம் உருவாக ஆரம்பித்ததுமே தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. லோகேஷ் கனகராஜ் டைரக்சன் என்பதும் அதுமட்டுமல்லாமல் மலையாள நடிகர் பஹத் பாசில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதும் என மலையாள ரசிகர்களும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
அந்தவகையில் நேற்று கேரளாவில் வெளியான விக்ரம் திரைப்படம் முதல் நாளில் சுமார் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் கூறுகின்றன. வழக்கம்போல கேரளாவிலும் கமலின் அதிகபட்ச வசூல் விக்ரம் படத்தில் தான் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல இதுவரை கேரளாவில் வெளியான தமிழ்ப்படங்களில் பாக்ஸ் ஆபிசில் முதல் நான்கு இடங்களில் விஜய்யின் படங்கள் மட்டுமே இடம் பிடித்திருந்தன. இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்து விஜய்யின் நான்கு படங்களுக்கு நடுவில் அமர்ந்துள்ளது.. அந்தவகையில் லேட்டாக வந்தாலும் கமலின் இந்த சாதனை லேட்டஸ்ட் தான்.