கோவை பீளமேடு ஃபன்மால் அருகே, ஸ்விகி நிறுவனத்தில் உணவு டெலிவிரி செய்யும் நபரை, போக்குவரத்து காவலர் தாக்கும் வீடியா சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அந்த ஊழியர் மோகனசுந்தரம், கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக, அந்த போக்குவரத்து காவலருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. இதையடுத்து சதீஷ் கன்ட்ரோல் ரூமுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும், அந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மோகனசுந்தரம் பி.எஸ்.சி பட்டதாரி ஆவார்
இதற்கிடையில், தாக்குதலுக்கு உள்ளான ஸ்விகி ஊழியர் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ஸ்விகியில் வேலை செய்றேன். நேற்று முன்தினம் மாலை 5 லிருந்து 6 மணிக்குள் உணவு டெலிவெரி செய்வதற்காக ஃபன் மால் அருகே சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த நேஷனல் மாடல் ஸ்கூல் பஸ் ஒரு பொண்ண இடிச்சுட்டு போனது. நா உடனே, பஸ்ஸ நிப்பாட்டுங்க பொண்ண இடிச்சுட்டு நிக்காம போறீங்களேனு சத்தம் போட்டேன். உடனடியா பேருந்தை நிறுத்தினாங்க.
அப்போ அங்கு வந்த போலீஸ்காரர், என்னை எதுவும் கேட்காமலே பல முறைஅறைந்துவிட்டு, நேஷனல் மாடல் ஸ்கூல் பஸ்ஸை நிறுத்தற அளவுக்கு நீ பெரிய ஆளா… நீ என்ன போலீசானு கேட்டார். நா வச்சிருந்த ஹெட்போன், வண்டிசாவி, மொபைலையும் எடுத்துட்டு போய்விட்டார். ஹாஸ்பிடல் போகக்கூட என்கிட்ட காசில்லை. நேத்து 500 ரூபாய் வைத்திருந்தேன். அதிலும் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு 300 ரூபாய் வைத்திருந்தேன்
ஸ்விகி என் பார்ட் டைம் தான். ஸ்டேசனரி ஷாப் ஒன்று வைத்து நடத்துறேன். கொரோனா காலத்துல கடைக்கு வாடகை கொடுக்க முடியாதநாள, ஸ்விக்க வேலைக்கு வந்தேன். ஸ்விகில வேலை பாக்குற பசங்க எல்லாம் பி.இ, பி.காம்’னு நெறய படிச்சுருக்காங்க. நான் ஆறு லாங்குவேஜ் பேசுவேன். கோகுலம் பார்க்ல ஐடி டிபார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணிருக்கேன். என்னோட குடும்ப சூழ்நிலையால் இந்த வேலைக்கு வந்திருக்கேனு கண்ணீருடன் தெரிவித்தார்.
இதற்கிடையில், தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு நலம் விசாரித்தார்.