கோவை: மண் வளத்தினை மீட்டெடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சத்குரு மேற்கொண்டுள்ள மோட்டர் சைக்கிள் பயணம், பாரத மண்ணின் வலிமையை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
புதுடெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் நடைபெற்ற மண் காப்போம் இயக்கம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு தனது மனமார்ந்த ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இந்த இயக்கம் மனித குலத்திற்கு மிகப்பெரிய சேவையாற்றும். “சத்குரு மேற்கொண்டுள்ள 30,000 கி.மீ மோட்டர் சைக்கிள் பயணம் மிகவும் கடினமானது. இது ஒரு மிகப்பெரிய வெற்றி. இந்தப் பயணத்தின் மூலம் உலகளவில் மண்ணின் மீதான அன்பு அதிகரித்துள்ளது. மேலும், பாரத மண்ணின் வலிமையையும் இந்தப் பயணம் உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, சத்குரு பேசும் போது, “நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பது போன்ற எல்லாவற்றிற்கும் மண் வளத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். எனவே, மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த நீண்ட கால முன்னெடுப்பில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் பங்கெடுக்க வேண்டும். மக்கள் குரல் கொடுத்தால் தான் அரசாங்கங்கள் இதுபோன்ற நீண்டகால திட்டங்களை செயல்படுத்த முன்வரும்” என்றார்.
மண் வளத்தை மீட்டெடுக்கும் இம்முயற்சியில் பிரதமர் மோடி முழு ஆதரவு அளித்து பல்வேறு வளர்ச்சி படிகளை எடுக்க வேண்டும் எனவும் சத்குரு ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள் வைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமரை சந்தித்து ‘மண் காப்போம்’ இயக்கத்தின் கொள்கை விளக்க கையேட்டினையும் வழங்கினார்.
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (ஜூன் 5) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டனர்.
மண் காப்போம் இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. உலகம் முழுவதும் சுமார் 250 கோடி மக்களை இவ்வியக்கம் சென்றடைந்துள்ளது. அத்துடன், மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி 15 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.