சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியமைக்காக மதுரை, விழுப்புரம், திருவண்ணாலை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு சாரா நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பசுமை விருதுகளை வழங்கினார். மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக, ரூ.3.42 கோடி மதிப்பில் 25 மின் வாகனங்களையும் முதல்வர் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நலமாக, வளமாக வாழ, தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியம்.
மக்கள் சார்ந்திருக்கும் நீர், காற்று, நிலம் ஆகியவற்றைச் சீர்படுத்துவதிலும், தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்துக்குரிய தாக்கங்களைக் குறைப்பதிலும் சூழல் அமைப்புகள் முக்கியமான அம்சங்களாக விளங்குகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனப் புகையே காற்று மாசடைவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காற்று மாசுவைக் குறைக்கும் முயற்சியாகவும், புவி வெப்பமயமாதலைத் தடுக்க ஏதுவாகவும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டுக்காக, ரூ.3.42 கோடி மதிப்பிலான 25 மின் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த வாகனங்களை அலுவலர்களிடம் நேற்று வழங்கி, அவற்றை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
ரூ.1 லட்சம் பரிசு
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பான பங்களிப்பு வழங்கியமைக்காக மாவட்ட ஆட்சியர்கள் டாக்டர் எஸ்.அனீஷ் சேகர் (மதுரை), த.மோகன் (விழுப்புரம்), பா.முருகேஷ் (திருவண்ணாமலை) ஆகியோருக்கு 2021-ம் ஆண்டுக்கான பசுமை விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.
மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயலாற்றி, விருதுக்குத் தேர்வான 79 அமைப்புகளில், ராணிப்பேட்டை டேனரி எஃப்ளுயன்ட் ட்ரீட்மென்ட் நிறுவனம், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள `க்ளீன் குன்னூர்’ அமைப்பு, போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு 2021-ம் ஆண்டுக்கான பசுமை முதன்மையாளர் விருதுடன், ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவர் ஏ.உதயன், உறுப்பினர்-செயலர் இரா.கண்ணன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர்களுக்கு விருது ஏன்?
சுற்றுச்சூழல் மாசு அடைவதைத் தடுக்க பெட்ரோல், டீசல் போன்றவாகனங்களைத் தவிர்த்து, வாரத்தில் ஒரு நாள் (புதன்கிழமை) அரசு ஊழியர்கள், அலுவலர்களை சைக்கிள் அல்லது பொது வாகனங்களில் வரவழைக்கத் திட்டமிட்டு, அதற்கு முன் உதாரணமாக ஆட்சியர்களே சைக்கிள் மற்றும் பொது வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அதேபோல, அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகளை நடுவதற்கு முக்கியத்துவம் அளித்தது, இளைஞர்களை மரக்கன்றுகள் நட ஊக்கப்படுத்தியது, பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக மஞ்சப்பைகளை ஊக்குவித்தது, பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியது போன்ற காரணங்களுக்காக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.