சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் நிறுவனத்தின் சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
‘கோர்டிலியா குரூஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சொகுசு கப்பல் சுற்றுலா சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, சென்னை துறைமுக கழகத் தலைவர் சுனில் பாலிவால், கோர்டிலியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் வர்மா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் மா.மதிவேந்தன் பேசும்போது, ‘‘கரோனா பரவல் குறைந்துள்ளதால் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. துறைசார்ந்த வளர்ச்சிக்கான செயல் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. சாகசப்பயணங்களை அனுமதிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் விரைவில் வெளியிடப்பட உள்ளன’’ என்று தெரிவித்தார்.
கட்டண விவரம்
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை வரும் 2 நாள் சுற்றுலா திட்டமும், சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி வழியாக மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் திட்டமும் இந்த சொகுசு கப்பலில் இயக்கப்படவுள்ளன. 2 நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தபட்சம் 2 நபருக்கு ரூ.40 ஆயிரம், அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்துக்குள் உணவும், தங்கும் செலவும் அடங்கும்.
பொழுதுபோக்கு அம்சங்கள்
சுமார் 700 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 11 தளங்கள் கொண்டது. ஒரே நேரத்தில் 1,950 பயணிகள் உட்பட 2,500 பேர் வரை பயணிக்க முடியும். இதில் மொத்தம் 796 அறைகள் உள்ளன. இதுதவிர கலையரங்கம், 4 பெரிய உணவகங்கள், மதுக்கூடம், உடற்பயிற்சி மையம், ஸ்பா, மசாஜ் நிலையம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. மேலும், கப்பலில் விருந்து கொண்டாட்டங்கள், திருமணங்கள், அலுவல் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என கப்பல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.