சோனியா மீது குலாம் நபி ஆசாத் அதிருப்தி – கட்சிக்குள் புகைச்சல்!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால், காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி மீது, அக்கட்சி மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா இருவரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களது பெயர்கள் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.

இதனால் இருவரும், இவர்களது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த, 2014 மக்களவை தேர்தல் முதல் காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், குலாம் நபி ஆசாத் தலைமையில் தான் ஜி 23 காங்கிரஸ் தலைவர்கள், கட்சி தலைமையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி, சோனியா காந்திவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அது முதல் அந்த கடிதத்தில் கையொப்பமிட்ட தலைவர்களில் ஒரு சிலரைத் தவிர்த்து, பெரும்பாலானோரை கட்சி தலைமை புறக்கணித்து வருகிறது.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சிந்தனையாளர் கூட்டத்திற்கு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இது ஜம்மு – காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பும் பறிபோன நிலையில் குலாம் நபி ஆசாத் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதை கேள்விப்பட்ட சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத்தை தொலைபேசியில் அழைத்து டெல்லி வருமாறு கூறியுள்ளார்.

அதன்படி குலாம் நபி ஆசாத் டெல்லி சென்று சோனியாவை சந்தித்து பேசி உள்ளார். அப்போது காங்கிரஸ் தலைமைக்கு அடுத்து இரண்டாவது இடத்தை குலாம் நபி ஆசாத்துக்கு அளிப்பதாக சோனியா காந்தி தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த பொறுப்பை ஏற்க மறுத்து விட்டதுடன், கடும் அதிருப்தியில் குலாம் நபி ஆசாத் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.