சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அண்ணாலை பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருமங்கலத்தில் பாஜக சார்பில் 500 துப்புரவுபணியாளர்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று, அரிசி, தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மிதிவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதேபோல, கள்ளிக்குப்பத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. முகப்பேர் சந்தானப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதற்கிடையே, அரசியல் கட்சித் தலைவர்கள் ட்விட்டர் பதிவுகளில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் அனைத்து நலனும், வளமும்பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: அண்ணாமலைக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவரது சமூகப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன்: தமிழக அரசியலின் புதிய அத்தியாயம், இளைஞர்களின் எழுச்சி நாயகனான அண்ணாமலை நோயின்றியும், தொய்வின்றியும் மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். பாஜக நிர்வாகிகள், தொண்டர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.