தாம்பரம் காவல் ஆணையராக பொறுப்பேற்கும் அமல்ராஜ் யார்? பின்னணி என்ன?

தாம்பரம் காவல் ஆணையரகத்தின் 2வது காவல் ஆணையராக  கூடுதல் டிஜிபி அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த அமல்ராஜ்? தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் சென்னை பெருநகர காவல்துறை இரண்டாக பிரிக்கப்பட்டது. தாம்பரம் தனி காவல் ஆணையரகமாகவும், ஆவடி தனி ஆணையரகரமாகவும் பிரிக்கப்பட்டன. தாம்பரம் காவல் ஆணையகத்திற்கு 20 காவல் நிலையங்களும், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு 25 காவல் நிலையங்களும் என பிரிக்கப்பட்டன.

தாம்பரம் முதல் காவல் ஆணையராக ரவி நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களாக அவர் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மே 31ம் தேதியன்று அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து ஆவடி காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் வசம் தாம்பரம் காவல் ஆணையர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.  இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையராக தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக இருந்த ஏடிஜிபி அமல்ராஜை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

image
1996ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் ஆன அமல்ராஜ், திருப்பூர் ஏஎஸ்பியாக தனது காவல் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர், அதன் பிறகு மதுரை புறநகர், தர்மபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக 2000ஆம் ஆண்டு முதல் 2010 வரை அவரது காவல் பணி பயணம் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து பதவி உயர்வு பெற்று திருச்சி, ராமநாதபுரம், சேலம் சரகங்களின்
டிஐஜியாகவும் பின்பு பதவி உயர்ந்து சேலம், திருச்சி, கோவை காவல் ஆணையராகவும், திருச்சி, கோவை மண்டல ஐஜியாகவும் பணியாற்றியவர் அமல்ராஜ். அதன் பிறகு சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்ட அமல்ராஜ் பின்னர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்ந்து ஆபரேஷன்ஸ் (கமாண்டோ பிரிவு) பிரிவு ஏடிஜிபியாக தமிழக அரசு அவரை நியமித்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக மாற்றப்பட்டார்.

image
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சொந்த ஊர். நாகர்கோவில்  கார்மல் பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்த அமல்ராஜ் பின்னர்  திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் அமல்ராஜ் ஹாக்கி விளையாட்டு வீரராக மிளிர்ந்தவர். அது மட்டுமின்றி தேசிய மாணவர் படையிலும் அங்கம் வகித்தார். ஐபிஎஸ் காவல் பணியில் சேர்ந்த பிறகு அமல்ராஜ் மனிதவள மேலாண்மைத்துறையில் எம்பிஏ பட்டமும், மதுரை
காமராஜர் பல்கலையில் டாக்டர் பட்டமும் பெற்றவர்.

சிறப்பான காவல் பணிக்காக அமல்ராஜ் ஜனாதிபதி பதக்கம் மற்றும் சிறந்த பொதுச்சேவை மற்றும் சிறந்த காவல் பணியாற்றியதற்காக முதலமைச்சரின் பதக்கங்களை பெற்றவர். துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வம் மிகுந்த அமல்ராஜ் தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு  பெற்றார். மாநில அளவில் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

திருச்சி, கோவையில் உலகத் தரம் வாய்ந்த துப்பாக்கி சுடும் தளங்களை காவல்துறை சார்பில் அமல்ராஜ் அமைத்தது குறிப்பிடத்தக்கது. அதே போல கோவை மற்றும் சென்னை எழும்பூரில் மாநிலத்திலேயே முதன் முறையாக போலீஸ் மியூசியம் அமைத்து முனைப்பாக செயல்பட்டவர். மேலும் சேலம், கோவை,
திருச்சியில் உயர்மட்ட சிசிடிவி கேமராக்கள் அடங்கிய நவீன கட்டுப்பாட்டு அறை அமைத்ததன் மூலம் அங்கு குற்றங்கள் 40 சதவீதம் குறைந்தன.

image
காவல் பணி மட்டுமின்றி எழுத்திலும் அமல்ராஜ் சிறந்த புலமைப் பெற்றவர். “காவல்துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள்”, “வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள்”, “வெல்ல நினைத்தால் வெல்லலாம்” “சிறகுகள் விரித்திடு”,  “போராடக் கற்றுக்கொள்” ஆகிய ஐந்து நூல்களை இவரே எழுதிய புத்தகங்கள் வெளி வந்துள்ளன என்பது காவல்துறையினரால் பாராட்டை பெற்றது.

தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அமல்ராஜ் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராகவும் பொறுப்பையும் கவனிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-சுப்பிரமணியன்

இதையும் படிக்கலாம்: ‘நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சிபெற அனுமதிக்கவில்லை’: மூத்த தளகட வீரர் புகார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.