திருமணம் மூலமும் கல்லாக்கட்டும் விக்னேஷ்சிவன் – நயன்தாரா ஜோடி

சிம்புவின் 'போடா போடி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து 2015ம் ஆண்டு அவர் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தின்போது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவருக்கும் வரும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், திருப்பதியில் நடைபெற்றால் நண்பர்கள், உறவினர்கள் பங்குபெற முடியாமல் போய்விடும் என்பதால் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கோலாகலமாக நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதை உறுதிசெய்யும் வகையில், இவர்களின் அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி டிரெண்டானது. இந்த நிலையில் நயன்தாரா – விக்னேஷ்சிவன் இருவரும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, தங்கள் திருமண அழைப்பிதழை வழங்கி உள்ளனர். அப்போது நடிகரும், எம்எல்ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

மேலும், இவர்களின் திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் மிக பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ஓட்டலில் ஜுன் 9ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்தத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கிறது.

இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்தை படமாக எடுத்து அதை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த திருமண வீடியோவை இயக்குனரும் நடிகருமான கவுதம் மேனன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தங்களது திருமண நிகழ்வுகளை டிவி சேனல்கள் அல்லது ஓடிடி தளங்களுக்கு விற்பனை செய்யும் ஐடியாக்கள் பாலிவுட்டில் பரவிவரும் சூழலில் கோலிவுட்டிலும் இந்த நடைமுறையை விக்னேஷ்சிவன் – நயன்தாரா ஜோடி துவக்கியுள்ளது. முன்னதாக தமிழில் நடிகர் பிரசன்னா – நடிகை சினேகா திருமணத்தை விஜய் டிவி ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.