நாடு முழுவதும் கைத்துப்பாக்கி விற்பனையை முடக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்மொழிந்ததை அடுத்து, கனேடிய மக்கள் துப்பாக்கி கடைகளுக்கு படையெடுத்துள்ளனர்.
கடந்த மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டத்தில் 19 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியைகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இந்த நிலையிலேயே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடு முழுவதும் கைத்துப்பாக்கி விற்பனையை முடக்க முன்மொழிந்தார்.
குறித்த விதி அமுலுக்கு கொண்டுவரப்படும் எனில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இருந்து கைத்துப்பாக்கிகள் விற்பனை முடக்கப்படும்.
ஆனால் குறித்த விதியானது இதுவரை நாடாளுமன்றத்தில் ஒப்புதலைப் பெறவில்லை. இருப்பினும், கனேடிய மக்கள் துப்பாக்கி கடைகளுக்கு தற்போது படையெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய சூழலில் ஒரு துப்பாக்கியை வாங்க தவறினால், இன்னொரு வாய்ப்பு இனி கிடைக்காது என்றே கனேடியர்கள் பலர் கூறுகின்றனர்.
பிரதமர் ட்ரூடோ அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில், கடைகளுக்கு முன்பு மக்கள் குவிந்துள்ளதாக சில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பல கடைகளில் துப்பாக்கிகள் விற்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று நாட்களில் 100 கைத்துப்பாகிகளை விற்றுள்ளதாக கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டத்திற்கு உட்பட்டு துப்பாக்கி வைத்திருப்போரை பிரதமரின் புதிய சட்டம் பாதிக்கும் எனவும், குற்றச்செயல்கள் கட்டுப்படும் என்பது உண்மைக்கு புறம்பானது எனவும் கனேடிய மக்கள் கூறுகின்றனர்.