சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சி பெற, சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் அனுமதிக்கவில்லை என திண்டுக்கல்லை சேர்ந்த 79 வயதான வீரர் புகார் தெரிவித்துள்ளார்.
வருகிற 29 ஆம் தேதி பின்லாந்தில் நடைபெற உள்ள உலக அளவிலான மாஸ்டர் தடகள போட்டியில் 195 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியா சார்பில் 75 முதல் 80 வயதோருக்கான போல்வால்ட் போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 79 வயதான சுப்பிரமணி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது சொந்த செலவில் பின்லாந்து செல்லவுள்ளா நிலையில், சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற விண்ணப்பித்தார். ஆனால், இதுவரை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வயதான காலத்திலும் நம்பிக்கையுடன் இருக்கும் தன்னை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார். இதனால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்பிரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM