பண்ருட்டி: கெடிலம் ஆற்றில் குளிக்கச்சென்று மூழ்கியவர்களை காப்பாற்றச் சென்றவர்கள் ஒருவர்பின் ஒருவராக மூழ்கியதை அடுத்து 7 பேர் பலியான சோகம் இன்று நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த ஏ.குச்சிப்பாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் இன்று குளிக்கச் சென்ற கர்ப்பிணி மற்றும் நர்ஸிங் மாணவிகள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஏ.குச்சிப்பாளையம் அருகே கீழ்அருங்குணத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிப்பதற்காக ஏ.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த முத்துராமன் மகள் சுமுதா (16), குணால் மகள் பிரியா (17), அமர்நாத் மகள் மோனிகா (15), சங்கர் மகள் சங்கவி (16), முத்துராம் மகள் நவிவிதா (18), அயன் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ராஜகுரு மகள் பிரியதர்ஷினி (15) அவரது தங்கை திவ்யதர்ஷினி (10) ஆகியோர் இன்று குளிப்பதற்காக கெடிலம் ஆற்று தடுப்பணைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது தடுப்பணையின் விளம்பில் நின்று குளித்துக் கொண்டிருக்கும் போது, முதலில் இருவர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற சென்ற மற்ற 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதையறிந்த நெல்லிக்குப்பம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக் கொண்டு சென்றனர். இதில் திருமணமாகி ஒரு மாதமே ஆகிய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ் மருத்துவமனையில் பார்வையிட்டு வருகிறார்.