பெங்களூரு : பள்ளி பாடங்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்து வருவதால் ரோகிக் சக்கரவர்த்தி தலைமையிலான பாடநுால் கமிட்டியை கலைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடக பள்ளி பாடப்புத்தக்கங்களில் இந்த கல்வி ஆண்டில் எழுத்தாளர் லோகித் சக்ரவர்த்தி தலைமையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் போன்ற சில தலைவர்களின் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது.
சில எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளின் கவிதை, கதைகளும் சேர்க்கப்பட்டிருந்தது.இதற்கு சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பாடங்களை கைவிடுமாறு கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தலைவர்கள் பாடங்கள் நீக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.இவ்வளவு விவாதத்துக்கும் ரோகித் சக்ரவர்த்தி தலைமையிலான பாடநுால் கமிட்டிதான் காரணம். அவர்கள் தேர்ந்தெடுத்த பாடங்களே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது அரசுக்கு தெரிய வந்துள்ளது. யாரோ ஒருவர் குவெம்புவின் மொழிப்பாடலை தவறாக சித்தரித்து வெளியிட்டிருந்தார்.இந்த பாடலை இவர் முகநுாலில் பதிவிட்டு ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். எனவே இவரை பாடநுால் கமிட்டியில் இருந்து கைவிட வேண்டும் என காங்கிரசார் கூறி வந்தனர்.இந்நிலையில், பாட நுால் விவாதம் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கல்வி அமைச்சர் நாகேஷ் அறிக்கை அளித்திருந்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ரோகித் சக்கரவர்த்தி தலைமையிலான பாடநுால் கமிட்டியை கலைத்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்சேபனைக்குரிய பாடங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் எழுத்தாளர் பரகூர் ராமச்சந்திரப்பா தலைமையில் உருவான படங்களில் எந்த சர்ச்சையும் எழவில்லை என்பதால் அதையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியகவி குவெம்பு சம்பந்தமாக புதிதாக மூன்று வசனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.இதன் மூலம் குவெம்புவின் வசனங்கள் 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பசவண்ணரின் பாடம் குறித்து புதிய கமிட்டி அமைத்து பரிசீலிக்கப்படும்; பகத்சிங் பாடம் மீண்டும் சேர்க்கப்படும்; திப்பு சுல்தான் பாடம் இதற்கு முன் இருந்ததை போலவே 6,7,10ம் வகுப்பு பாடங்களில் தொடரும் என்பது போன்ற முடிவுகளை அரசு எடுத்துள்ளது.
Advertisement