இஸ்லாமாபாத்,
பணமோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகனை கைது செய்ய பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு (எப் ஐ ஏ) கோரியுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியது. இதனையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பல நூறு கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை கைது செய்ய புலனாய்வு அமைப்பு அனுமதி கோரியுள்ளது. முந்தைய இம்ரான்கான் ஆட்சியின் போது ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டன.
அந்த வகையில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷபாஸ் ஆகிய இருவரும் 2008-2018 இடையிலான காலக்கட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களில் இருந்து ரூ.626 கோடி கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
இந்த வழக்கில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷபாஸ் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் கைது நடவடிக்கையை தவிர்க்க கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். அவர்கள் மீது ரூ.1400 கோடி (75 மில்லியன் டாலர்) பணமோசடி வழக்கில், அவர்களுக்கு எதிராக இடைக்கால விசாரணை அறிக்கையையும் புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்தது.
இந்த சூழலில்தான் அண்மையில் ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். அதேபோல் அவரது மகன் ஹம்சா ஷபாசும் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக பெறுப்பேற்றார்.
இதனிடையே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சிறப்பு கோர்ட்டில் பிரதமர் ஷேபாஸ் மற்றும் ஹம்சா ஆகியோர் ஆஜராகினர். விசாரணையில், அவர்களின் முன் ஜாமீனை ஜூன் 11ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியாக கருதப்படும் பிரதமரின் இன்னொரு மகன் சுலைமான் ஷெஹ்பாஸ், 2019-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை மீண்டும் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும்,விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்தது.