அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,
“தமிழக மக்களுக்காக என்றுமே அதிமுக சேவை செய்கின்ற ஒரு இயக்கமாகும். தமிழகத்தைப் பொருத்தவரை எப்போதும் அதிமுக-திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் பிரதான கட்சிகள்.
ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக பலவகைகளில் அரசியல் செய்து வருகிறார்.
முன்பு பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பாக பணியாற்றியிருந்தார். அவருக்கு ஒரு பதவி கிடைத்தது அதனைத்தொடர்ந்து எல் முருகன் வேல் யாத்திரை நடத்தி தற்போது மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
அதேபோல் தான் தற்போது அண்ணாமலையும் பதவிக்காக அரசியல் செய்து வருகிறார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டுமோ அதை அதிமுக சிறப்பாக செய்து வருகிறது. திமுகவினரின் ஊழல்களை அவ்வப்போது வெட்ட வெளிச்சத்திற்கு அதிமுக கொண்டு வருகிறது. இதை மக்கள் மத்தியிலும் வெளிப்படுத்துவதில் எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. தமிழக மக்கள் விரும்பக்கூடிய ஒரு இயக்கமாக அதிமுக இருந்து வருகிறது.
பாஜகவின் ஒரு சில கூட்டங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது. அதற்காக அது பிரதான கட்சி ஆகிவிட முடியாது. இறை எங்கே இருக்கிறதோ., அங்கே தான் அதிகமான காக்கா கூடும்., பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம்.
காலை நேரத்தில் நாகூரில் அதிகளவில் புறாக்கள் பறக்கும். பின்னர் அந்த புறாக்கள் அனைத்தும் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும். ஆனால், அதிமுகவுக்கு கூடுவது கொள்கைக் கூட்டம்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.