புதுடெல்லி: ஆபாசத்தை தூண்டும் வகையில் ஒளிபரப்பட்ட ‘பாடி ஸ்பிரே’ விளம்பரத்திற்கு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்து உள்ளது. ‘லேயர் ஷாட்’ எனப்படும் ‘பாடி ஸ்பிரே’வை தயாரிக்கும் நிறுவனம், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இரட்டை அர்த்தங்களுடன் விளம்பரம் ஒளிபரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விளம்பர வீடியோவில், கடை ஒன்றில் இளம்பெண் ஒருவர் மேற்கண்ட வாசனை திரவியத்தை வாங்கும்போது அங்கிருக்கும் நான்கு இளைஞர்கள், ‘நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம்’ என இரட்டை அர்த்தத்துடன் கூடிய வசனத்தை பேசுகின்றனர். அப்போது, இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது. இதுபோன்ற விளம்பரங்கள் இளைஞர்களிடையே பாலியல் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ‘லேயர் ஷாட்’ நிறுவனத்தின் விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என சமூக வலைதளங்களுக்கு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்து உள்ளது.