பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆதிக்கம் செலுத்தி வரும் நடால், 14 முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 6-3, 6-3, 6-0 என நார்வேயின் காஸ்பர் ரூட்டை தோற்கடித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-5’ வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், 8வது இடத்தில் உள்ள நார்வேயின் காஸ்பர் ரூட் மோதினர். களிமண் கள பிரெஞ்ச் ஓபனில் மன்னனான நடால் 6-3, 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் பிரெஞ்ச் ஓபனில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். இவர், 14 முறை கோப்பை வென்றுள்ளார்.
ரூ. 18 கோடி பரிசு
பிரெஞ்ச் ஓபன் பைனலில் வெற்றி பெற்ற ஸ்பெயினின் நடால், சாம்பியன் கோப்பையுடன் ரூ. 18 கோடி பரிசு தொகை பெற்றார். இரண்டாவது இடம் பிடித்த நார்வேயின் காஸ்பர் ரூட், ரூ. 9 கோடி பரிசு வென்றார்.
22 முறை
பிரெஞ்ச் ஓபனில் அசத்திய நடால், கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். இவர், ஆஸ்திரேலிய ஓபனில் 2 (2009, 2022), பிரெஞ்ச் ஓபனில் 14 (2005-08, 2010-14, 2017-20, 2022), விம்பிள்டனில் 2 (2008, 2010), யு.எஸ்., ஓபனில் 4 (2010, 2013, 2017, 2019) என, மொத்தம் 22 முறை கோப்பை வென்றுள்ளார்.அடுத்த இடத்தை தலா 20 முறை சாம்பியன் பட்டம் வென்ற செர்பியாவின் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் பெடரர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
Advertisement