புதுடெல்லி: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நறுமண திரவிய (சென்ட்) விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தை உடனடியாக நீக்குமாறும், அதை வெளியிட்ட நிறுவனத்துக்கு கடுமையான தண்டனையும், அதிகபட்ச அபராதமும் விதிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதன் நகல் டெல்லி காவல் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் உடனடியாக நிறுவனத்துக் கெதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விளம்பரம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் டெல்லி போலீஸுக்கு அனுப்பி உள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
மிகவும் மலிவான விளம்பர நோக்கில் பெண்களுக்கு எதிராக இந்த சென்ட் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. பெண்களை கேவலப்படுத்துவதோடு, கூட்டு பாலியல் பலாத்கார செயலை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளம்பரம் உள்ளது. எனவே அதை உடனடியாக நீக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்ற செயல்களைத் தூண்டும் வகையிலும் இந்த விளம்பரம் உள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர் அனுராக் தாக்குர் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மலிவால் வலியுறுத்தியுள்ளார்.
விளம்பரத்தை வெளியிட்ட சென்ட் நிறுவனத்துக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் மற்ற நிறுவனங்கள் இதுபோன்ற மலிவான விளம்பர உத்திகளை எதிர்காலத்தில் கையாளாது என்றும் சுவாதி மலிவால் அந்த நோட்டீஸில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை ஜூன் 9-ம் தேதிக்குள் ஆணையத்திடம் தாக்கல் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“சென்ட் தயாரிக்கிறீர்களா அல்லது கூட்டு பாலியல் பலாத்காரத்தை ஊக்குவிக்கிறீர்களா? கற்பனைத் திறன் என்ற போர்வையில் எத்தகைய மலிவான போக்கை கடைபிடித்துள்ளீர்கள்,’’ என்று அந்நிறுவனம் குறித்து தனது ட்விட்டர் பதிவில் சுவாதி மலிவால் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 9-ம் தேதிக்குள் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.