தொடர்ச்சியாக 2 பெண் குழந்தைகளை பெற்ற பெண்ணை, ஆண் குழந்தை பெற்றுதராதது ஏன்? எனக்கேட்டு அவரது மாமியார் வீதியில் இழுத்துபோட்டு அடித்து உதைத்த கொடுமை எதிர் வீட்டுக்காரர் எடுத்த வீடியோ மூலம் அம்பலமாகி உள்ளது.
இவர்கள் எல்லாம் இன்னுமா திருந்தல என்று கேள்வி எழும் விதமான இந்த கொடுமை உத்திர பிரதேசம் மாநிலம் மஹோபா மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. இங்குள்ள கிராமத்தை சேர்ந்த நீரஜ் பிரஜாப்தி, இவரது மனைவி குஸ்மா.
இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் குழந்தை ஏன் பற்றுத்தரவில்லை எனக்கேட்டு மாமியாரும், கணவரின் உறவினர்களும் நீண்ட நாட்களாக கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவத்தன்று மீண்டும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க பெண்குழந்தைகளை எப்படி பெறலாம் எனக்கேட்டு கணவர், மாமியார் மற்றும் கணவரின் உறவினர்கள், அவரை வீதியில் இழுத்துப்போட்டு அடித்து உதைத்தனர்
குஸ்மா தப்பித்து ஓடிபோய்விடக்கூடாது என்று கட்டிப்போட்டு அடித்துள்ளனர். பெரிய பெரிய கற்களை கொண்டும் தாக்கி உள்ளனர். கீழே கிடந்த தடித்த குச்சிகளை கொண்டும் அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர்
அந்த தெருவில் நின்ற 3 வாயில்லா ஜீவன்களை போல சிலர் தடுக்க முயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வேதனையின் உச்சமாக இருந்தது
இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்த நாளில் இருந்து கணவரின் குடும்பத்தினர் பலமுறை தனக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டதாகவும், இதன் காரணமாக தான் கூலி வேலைக்கு போக ஆரம்பித்ததாகவும் தெரிவித்த அந்த பெண் தன்னை குடும்பமே சேர்ந்து திட்டி, அடித்து உதைத்தாக போலீசில் புகார் அளித்துள்ளார்
இந்த விவகாரம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் “தாக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று மஹோபா காவல் துறையினர் உறுதி அளித்துள்ளனர். பெண் குழந்தை பெற்றதற்கு அந்தப்பெண்ணின் கணவர் தான் முக்கிய காரணம் என்பதை கூட உணராத நிலையில் மனைவி மீது நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் எழுந்துள்ளது.