உத்தர கன்னடா : தனக்கு மாரடைப்பு ஏற்படுவதை உணர்ந்த, கே.எஸ்.ஆர்.டி.சி., ஓட்டுனர் உடனடியாக பஸ்சை நிறுத்தி, நேரவிருந்த அசம்பாவிதத்தை தவிர்த்தார். அதன்பின் உயிரிழந்தார்.உத்தர கன்னடா, முன்டகோடாவிலிருந்து, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், நேற்று காலை எல்லாபுராவுக்கு புறப்பட்டது. மைனள்ளி அருகில் செல்லும் போது, ஓட்டுனர் மல்லப்பா சோமப்பனவர், 45, என்பவருக்கு இதய வலி ஏற்பட்டது.
தனக்கு மாரடைப்பு ஏற்படுவதை உணர்ந்த அவர், உடனடியாக பஸ்சை சாலை ஓரத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினார்.பஸ்சிலிருந்த 38 பயணியரும் கீழே இறங்கினர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாரடைப்புக்கு ஆளான மல்லப்பாவை, பயணியர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். வலியிலும் கூட அசம்பாவிதத்தை தவிர்த்து, தங்கள் உயிரை காப்பாற்றிய மல்லப்பா மறைவு, பயணியரை வேதனைப்பட வைத்தது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு கூறியதாவது:கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் ஓட்டுனர் மல்லப்பா, தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், பஸ்சை சாலையோரமாக நிறுத்தி, நேரவிருந்த பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தது, பெருமையான விஷயம். அவரது ஆத்மாவுக்கு, இறைவன் அமைதியை அளிக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement