பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, கியான்வாபி மசூதி தொடர்பான விவாதத்தின் போது முகமது நபிகள் குறித்து சர்ச்சையான முறையில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். அது மட்டுமின்றி அவர்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பா.ஜ.க செய்தித் தொடர்பாளரின் இத்தகைய பேச்சு மற்ற மதங்களை இழிவு படுத்துவதாகக் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த விவகாரம் தேசியளவில் விவாதப்பொருளான நிலையில், டெல்லி பா.ஜ.க-வைச் சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.
பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதைப் பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. எந்த ஒரு மதத்தினரையும் இழிவுபடுத்துவதைப் பா.ஜ.க.விரும்பவில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நபிகள் குறித்ததான சர்ச்சை கருத்து காரணமாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி பா.ஜ.க-வின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பா.ஜ.க மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், போலீஸாரும் நுபுர் சர்மாமீது வழக்கு பதிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.