இந்திய நிகழ்வுகள்
பட்டப் பகலில் வாலிபர் கொலை:டில்லியில் பயங்கரம்
புதுடில்லி-டில்லியில் பட்டப் பகலில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. டில்லி ஆதர்ஷ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒருவரை, இருவர் ‘பிளேடு’ மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:டில்லியைச் சேர்ந்த நரேந்தர், ராகுல் ஆகிய இருவர் மீது செயின் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. போதைக்கு அடிமையான நரேந்தர், கடன் கேட்டு நச்சரித்ததால், ராகுல் தன் சகோதரருடன் சேர்ந்து நரேந்தரை பிளேடால் அறுத்தும், கல்லால் தாக்கியும் உள்ளனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் நரேந்தரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
ஆந்திராவில் வாயு கசிவு178 பேருக்கு மயக்கம்
விசாகப்பட்டினம்-ஆந்திராவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலையில், ‘அமோனியா’ வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து, 178 தொழிலாளர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இங்கு விசாகப்பட்டினம் அருகே உள்ள அச்சுதாபுரம் என்ற இடத்தில், சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, ‘போரஸ் லபாரட்டரீஸ்’ என்ற தொழிற்சாலையில் நேற்று, ‘அமோனியா வாயு’ கசிவு ஏற்பட்டது; இது, அருகே உள்ள ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைக்கு பரவியதை அடுத்து, அங்கு பணியில் இருந்த 178 பேருக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அனைவரும் நலமாக இருப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது.ஆந்திர மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் குழந்தை பெறாத மனைவியை சித்ரவதை செய்த கணவனுக்கு வலை
லக்னோ-ஆண் குழந்தை பெற்றுத் தராததால் மனைவியை சித்ரவதை செய்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இளைஞர், மனைவியை அடித்து சித்ரவதை செய்யும் ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் கெஞ்சுகிறார். அந்தப் பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் ஒரு பெண் ஆகிய மூவரும் சேர்ந்து, அந்த இளம் பெண்ணை சரமாரியாக உதைக்கின்றனர்; அவரது முகத்திலும் குத்துகின்றனர். அந்த பெண் கெஞ்சியும் அந்த மூவரும் இரக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண் போலீசாரிடம் கூறியதாவது: என் கணவரும், அவரது குடும்பத்தினரும் ஆண் குழந்தை பெற்றுத் தர வேண்டும் என கூறினர். ஆனால், எங்களுக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் தான் பிறந்தன. அதனால், பெண் குழந்தை பிறந்ததற்கு நான் தான் காரணம் என என்னை தினமும் சித்ரவதை செய்கின்றனர். நான் கூலி வேலைக்கு சென்று பணமும் கொடுக்கிறேன். ஆனாலும், எனக்கு மட்டும் உணவு கொடுக்க மாட்டார்கள். பல நாட்கள் பட்டினியால் தவித்துள்ளேன். அடியும், உதையும் தாங்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.போலீசார் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அந்தப் பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கான்பூர் கலவரத்தால் பதற்றம்: 36 பேர் கைது
லக்னோ-உத்தர பிரதேசத்தின் கான்பூரில் நேற்று முன் தினம் வெடித்த கலவரத்தில், போலீசார் உட்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ., செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, ‘டிவி’ விவாதத்தில் பேசுகையில், முஸ்லிம் மதம் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கான்பூரின் பரேட், நை சடக், யாதீம்கானா பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்கள், அப்பகுதியில் கடைகளை மூட வலியுறுத்தினர். இதற்கு சிலர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, கற்கள் மற்றும் பெட்ரோல்குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அங்கு பயங்கர கலவரம் மூண்டது. கலவரக்காரர்களை அடக்க வந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், போலீசார் உட்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கண்காணிப்பு கேமரா வாயிலாக அடையாளம் காணப்பட்டனர். அதில், 36 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், 1,000 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கான்பூர் போலீஸ் கமிஷனர் விஜய் சிங் மீனா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் அடையாளம் கண்டு வருகிறோம். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் அல்லது அவர்களது உடைமைகள் புல்டோசரால் இடித்து தள்ளப்படும்.இந்த கலவரத்தின் பின்னணியில், ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ உட்பட சில அமைப்புகளின் பங்கு உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறோம். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக நிகழ்வுகள்
சிறுமியின் கருமுட்டை விற்பனை: 2 மருத்துவமனைகளுக்கு சம்மன்
ஈரோடு,-சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு, பெருந்
துறையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோட்டில் 16வயது மகளை வளர்த்து வந்த தாய், கணவனை பிரிந்தார். அதே பகுதியில் வேலை செய்த பெயின்டருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்தார். பெயின்டரும், அப்பெண்ணும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கருமுட்டை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர்.
மகளை பெயின்டர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி, 8 முறை கருமுட்டை விற்பனை செய்துள்ளார். இதற்காக சிறுமியின் பெயர், பிறந்த தேதி, ஆதார் அட்டையை போலியாக தயாரித்து ஈரோடு, சேலம், பெருந்துறை, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் விசாரித்து சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, ஈரோடு பாரதிபுரம் ஜான் ஆகியோரை போக்சோ, ஆதார் அட்டையை திருத்தம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இது தொடர்பாக கூடுதல் எஸ்.பி., கனகேஸ்வரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரு முட்டை விவகாரம், போலி ஆதார் அட்டை தயாரித்தது தொடர்பாக ஈரோடு, பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு, ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
ஈரோடு மாவட்ட மருத்துவ நல பணிகள் சார்பில் தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டை விவகாரம் தொடர்பாக விசாரணை துவங்கி உள்ளது.சென்னையில் இருந்து இன்று அல்லது நாளை டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர், கருமுட்டை விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஈரோடு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இளைஞர்களிடம் ரூ 25 லட்சம் வரை மோசடி செய்தவர் கைது
கிருஷ்ணகிரி,-வீட்டிலிருந்தபடியே கைநிறைய சம்பாதிக்கலாம் எனக்கூறி, படித்த இளைஞர்களிடம் ஆசை காட்டி, 25 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தவரை, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த எம்.நடுப்பட்டி கருங்கல் நகரை சேர்ந்தவர் பூவரசன், 24; ஐ.டி.ஐ., படித்துள்ளார். கடந்த ஜனவரியில் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றுள்ளார்.
அதன்பின் அவரது மொபைலுக்கு போன் செய்த நபர், ‘நீங்கள் சேலத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிக்கு தேர்வாகி உள்ளீர்கள், வீட்டிலிருந்தபடியே மாதந்தோறும், 20 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிக்கலாம். அதற்காக, 4,700 ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும்’ என, கூறியுள்ளார்.
அதன்படி, அவர் கூறிய வங்கி கணக்கில் பணத்தை கட்டி, பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பூவரசனிடம், நுாற்றுக்கணக்கான மொபைல் எண்களை வழங்கி, அவர்களுக்கு லோன் வேண்டுமா எனக்கேட்டு, அறிக்கை கொடுக்க நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
வீட்டிலிருந்தபடியே பூவரசன் மூன்று மாதம் வேலை பார்த்தும், ஊதியம் வழங்காதது குறித்து கேட்டபோது, உங்களுக்கு பணி திறமை இல்லை எனக்கூறி அவரை நிறுவனத்திலிருந்து நீக்கியுள்ளனர்.
இதுகுறித்து பூவரசன், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் காந்திமதி, கோவை, ஒண்டிபுதுாரை சேர்ந்த கிருஷ்ணகுமார், 43, என்பவரை கைது செய்தார்.
இதுகுறித்து, சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி., சங்கு கூறியதாவது:
பூவரசன் புகார்படி, சேலத்தில் நிறுவனம் நடத்தி வரும் கோவை, ஒண்டிபுதுாரை சேர்ந்த கிருஷ்ண குமாரை விசாரித்தோம்.
அவரது வங்கி கணக்கில் கடந்த, ஜனவரி முதல் மே வரை, 4,000 முதல் 5,000 ரூபாய் வரை, 641 பேர் பணம் போட்டுள்ளனர். அதன்படி
கிருஷ்ணகுமார், 25 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளது
தெரிந்தது.
இது கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் நடந்துள்ளது. இதில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த படித்த இளைஞர்களை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. பணத்தை கொடுத்து ஏமாந்தவர்களை இணைத்து ஒரே வழக்காகவோ அல்லது மாவட்டம் வாரியாகவோ கூடுதல் வழக்குகள் போடப்படும்.
படித்த இளைஞர்கள்
நிறுவனத்தை பற்றி நன்கறிந்து பணியில் சேரவோ, விபரங்களை அளிக்கவோ வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு
பாப்பிரெட்டிப்பட்டி,பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது, போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டியை சேர்ந்தவர் ஜெயசூர்யா, 20; இவர், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த, 17 வயது, பிளஸ் 2 மாணவியை, கடந்த ஜன., 23ல் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவியின் வயிறு பெரிதாக இருப்பதை கண்ட பெற்றோர் கடந்த, 2ல் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. மாணவி புகார்படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் ஜெயசூர்யா மீது, போக்சோவில் வழக்குப்பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
கிணற்றில் விழுந்த மகன் பலி; தாய் கண் எதிரே சோகம்
வாழப்பாடி,-காரிப்பட்டி அடுத்த, கருமாபுரத்தை சேர்ந்த விவசாயி வேலு, 53. இவரது மனைவி வசந்தா, 50. இவர்களது மூத்த மகன் சுரேஷ், 32; மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன்தினம் மாலை, தாயுடன், கிணற்றில் இருந்து விளைநிலத்துக்கு தண்ணீர் திறந்து விட சென்றார். அப்போது, தாய் கண்ணெதிரே, கிணற்றில் தவறி விழுந்த சுரேஷ் உயிரிழந்தார். வாழப்பாடி தீயணைப்பு படையினர், 2 மணி நேரம் போராடி, சுரேஷ் உடலை மீட்டனர். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மளிகை கடையை உடைத்து நகை பணம் கொள்ளை
கோபால்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி அதிகாரிபட்டியில் பூட்டியிருந்த மளிகை கடையை உடைத்து 30 பவுன் நகை, ரூ. 12 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.
அதிகாரிபட்டியில் மளிகை கடை நடத்தி வருபவர் மனோகரன் 62. கடைக்கு பின்புறம் வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டில் துாங்கினார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க வீட்டை திறந்தபோது வெளிப்புறமாக வீடு பூட்டியிருந்தது. அதிர்ச்சியடைந்த மனோகரன் சத்தம் போட்டதால் பக்கத்து வீட்டினர் கதவை திறந்தனர். வெளியில் பார்த்தபோது மளிகை கடையின் கூரை ஓடுகள் உடைந்து சிதறி கிடந்தன.
மளிகை கடையை திறந்தபோது கல்லாவில் இருந்த ரூ.12 லட்சம், 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.இடம் விற்ற பணத்தை கடையில் வைத்திருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கொள்ளையர்களை தேடும் பணியில் சாணார்பட்டி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதே கடையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவில் விழாவுக்கு சென்ற வாலிபர் கொலை
திருநெல்வேலி:ஆலங்குளம் அருகே கோயில் கொடை விழாவிற்கு சென்ற வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி பேட்டையை சேர்ந்தவர் சேதுபதி 20. தூய்மைப்பணியாளர். இவர் நேற்று முன்தினம் இரவு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கருவந்தா கிராமத்தில் நடந்த கோயில் கொடை விழாவிற்கு சென்றிருந்தார்.அங்கு அவரை 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது.
ஊத்துமலை போலீசார் விசாரித்தனர். ஏற்கனவே திருமணமான பெண் ஒருவருடன் சேதுபதிக்கு தொடர்பு இருந்துள்ளது. இதில் ஆத்திரமுற்ற அவரது உறவினர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மூடிய காரில் 3 குழந்தைகள் பலி
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காரில் விளையாடிக்கொண்டிருந்த போது கதவு மூடிக் கொண்டதால் 2 சிறுவர்கள் ஒரு சிறுமி பலியாயினர்.
பணகுடி அருகே லெப்பைகுடியிருப்பு, பாலர் பள்ளியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது வீட்டு அருகே உறவினருக்கு சொந்தமான காரை நிறுத்தி இருந்தார். நேற்று மாலை 5:00 மணிக்கு அந்த காருக்குள் நாகராஜனின் மகள் நிதிஷா 7, மகன் நிதிஷ் 5, அதே பகுதியை சேர்ந்த சுதனின் மகன் கபிசாந்த் 4, விளையாடிக் கொண்டிருந்தனர். கதவை மூடினர். பின் திறக்க முடியவில்லை. மூன்று குழந்தைகளும் சுவாசக் காற்றின்றி காருக்குள்ளேயே இறந்தனர். குழந்தைகளை நீண்ட நேரமாக காணவில்லை என தேடிய பெற்றோர் காருக்குள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பணகுடி போலீசார் விசாரித்தனர்