ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தலுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், 6 அதிருப்தி எம்எல்ஏ.க்களையும் சமாதானப்படுத்தி அவர்களையும் சொகுசு விடுதிக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அழைத்து வந்தார்.நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை எம்பிகளுக்கான தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில் 4 மாநிலங்களவை பதவி காலியாக உள்ளன. ஆளும் காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகிய 3 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரசுக்கு 108 எம்எல்ஏக்கள் இருப்பதால், 2 பதவிகளை உறுதியாக வெல்ல முடியும். பிற கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவு தந்தால் மட்டுமே 3வது பதவியை கைப்பற்ற முடியும். இதனால், குதிரைப் பேரம் நடப்பதை தவிர்க்க, காங்கிரஸ் கட்சி தனது அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களை உதய்ப்பூரில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைத்துள்ளது.இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் உட்பட 6 பேர் அதிருப்தியில் இருந்தனர். அவர்களை நேற்று முன்தினம் முதல்வர் அசோக் கெலாட் தனது வீட்டிற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, 6 எம்எல்ஏக்களுடன் அவர் நேற்று உதய்பூர் வந்தடைந்தார். விமான நிலையத்தில் பேட்டி அளித்த கெலாட், ‘‘பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வென்று, காங்கிரசில் சேர்ந்த எம்எல்ஏக்கள் எங்களுக்கு நிபந்தனையின்றி ஆதரவு தருகின்றனர். ஆனால், பாஜ குதிரைப் பேரம் நடத்தி எம்எல்ஏக்களை குறுக்குவழியில் வளைக்கப் பார்க்கிறது. இதுதொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவிடமும் புகார் தந்துள்ளோம்’’ என்றார்.ஒரு இடத்தில் உறுதியாக வெல்லக்கூடிய நிலையில் உள்ள பாஜ, 2வது இடத்துக்கு சுயேச்சை வேட்பாளரான பிரபல ஊடக நிறுவன உரிமையாளர் சுபாஷ் சந்திராவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இவரை வெற்றி பெறச் செய்வதற்காக காங்கிரஸ், அதன் ஆதரவு எம்எல்ஏ.க்களுக்கு வலை வீசுகிறது. இதனால், காங்கிரஸ் 3வது இடத்தை கைப்பற்றுவதில் சிக்கல் நிலவுகிறது. மகாராஷ்டிராவிலும் ஒரு இடத்திற்கு கடும் போட்டி நிலவுவதால், பாஜ குதிரைப்பேரத்தில் ஈடுபடும் என்பதால், ஆளும் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் அனைவரையும் சொகுசு ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மூத்த தலைவர்களிடம் பொறுப்பு ஒப்படைப்பு அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இம்மூன்று மாநிலத்திலும் காங்கிரசுக்கு சுயேச்சை அல்லது பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால், 3 மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக மூத்த தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவுக்கு மல்லிகார்ஜூனா கார்கே, அரியானாவுக்கு ராஜீவ் சுக்லா, ராஜஸ்தானுக்கு பவன் குமார் பன்சால் மற்றும் டி.எஸ்.சிங்கை நியமித்து சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.