வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ரூபாய் நோட்டுகளில் ரவிந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் படத்தை அச்சிடுவது குறித்து மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது ரூபாய் நோட்டுகளில், மஹாத்மா காந்தி புகைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ரவிந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை கொண்ட புதிய சீரிஸ் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்து பரிசீலனை நடப்பதாக கூறப்படுகிறது. மஹாத்மா காந்திக்கு அடுத்து மற்ற தலைவர்களின் படங்களை அச்சிடுவது குறித்து பரிசீலனை செய்வது இது முதல்முறையாகும்.
ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பிரிண்டிங் அண்டு மிண்டிங் கார்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனமும், மஹாத்மா காந்தி, ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாமின் படங்களை கொண்ட இரண்டு தனித்தனி ரூபாய் நோட்டு மாதிரிகளை டில்லி ஐஐடி பேராசிரியர் திலிப் ஷகானிக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில், எதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என பரிந்துரைக்க கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ஒரு படத்தை மட்டும் தேர்வு செய்வதா அல்லது 3 படங்களையும் தேர்வு செய்வதா என்பது குறித்து முடிவை அரசின் உயர்மட்டத்தில் எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை. அதேநேரத்தில், ரூபாய் நோட்டுகளில் பலரின் புகைப்படங்களை சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்த நடவடிக்கை உதவும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2017 ல் ரூபாய் நோட்டுகளில், இடம்பெற வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை ரிசர்வ் வங்கி அமைத்தது. அந்த குழுவானது, கடந்த 2020ம் ஆண்டு அளித்த அறிக்கையில் ரூபாய் நோட்டுகளில் மஹாத்மா காந்தி புகைப்படத்துடன், ரவிந்திரநாத் தாகூர் மற்றும் கலாம் ஆகியோரின் புகைப்படங்களை இடம்பெறலாம் என பரிந்துரை வழங்கியிருந்தது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதையும் நிறுத்த வேண்டும் எனக்கூறியிருந்தது.
அமெரிக்க ரூபாயான டாலரில், ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் பிரான்க்ளின், தாமஸ் ஜெபர்சன், ஆண்ட்ரு ஜாக்சன், அலெக்சாண்டர் ஹாமில்டன், ஆபிரகாம் லிங்கன் ஆகியோரின் புகைப்படங்கள் இருக்கும்.
Advertisement