சென்னை: ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரம் கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, ’மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ சில நாட்களுக்கு முன்வு தெரிவித்தார்.
இதன்படி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுசசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த இயந்திரத்தை இன்று அறிமுகம் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டில் இந்த இயந்திரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டது. பொதுமக்கள் ரூ.10 செலுத்தி இயந்திரம் மூலம் மஞ்சப்பையை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.