பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி முஸ்லிம் மாணவிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் (தலை முக்காடு) அணிய மாநில அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடந்தது. ஹிஜாப் அணிய தடை விதிககப்பட்டதை கண்டித்து பள்ளி, கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் தேர்வுகளைப் புறக்கணித்தனர். எனினும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் 6 பேர் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தற்போது பள்ளி, கல்லூரிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் உடுப்பி, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்திடம் கோரினர். இதற்கு அனுமதி கிடைக்காததால் ஆங்காங்கே மாணவிகள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்டித்து ஏபிவிபி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் உடுப்பியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கர்நாடக தேர்வு ஆணையம், தொழில்முறை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (சி.இ.டி) ஹிஜாப் உள்ளிட்ட மதத்தை குறிக்கும் உடைகளை அணிந்து வரக் கூடாது என சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு முஸ்லிம் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.