ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 100 நாள்களைக் கடந்துவிட்டது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன்மீது போர்த்தொடுத்தது. அன்றுமுதல் நான்கு மாதங்களாக போர் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் போரில் உக்ரைன் மட்டுமல்லாமல் ரஷ்யா மற்றும் உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
உக்ரைன் தரப்பின் இழப்பு:
உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றான ரஷ்ய ராணுவத்தை எதிர்கொண்டு வரும் உக்ரைன், இந்தப் போரால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, உக்ரைன் தனது மொத்த நிலப்பரப்பில் 20% சதவிகிதத்தை ரஷ்யாவிடம் இழந்திருக்கிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, “உக்ரைனின் தெற்குப் பகுதியில் இருக்கும் கிரீமிய தீபகற்பம், கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பெரும்பகுதிகள் உட்பட நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதாவது 3,620 பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்திருக்கிறது.
ஏற்கெனவே, 2014-ல், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத குழுக்களும், ரஷ்ய ராணுவமும் சேர்ந்து உக்ரைனின் 43,000 ச.கி.மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், கடந்த 3 மாதங்களைக் கடந்து நடைபெற்று வரும் போருக்குப் பின்னர், உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பானது, கிட்டதட்ட 1,25,000 ச.கி.மீட்டராக விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலும், ரஷ்யா போரைத் தொடங்கியதிலிருந்து சுமார் 3,00,000 ச.கி.மீட்டர் பகுதிகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன; வெடிக்காத வெடிகுண்டுகள் முழுக்க நிரம்பியிருக்கின்றன. இதனால் அந்த பகுதிகள் கடுமையாக மாசுபடுத்தப்பட்டிருக்கின்றன” என தெரிவித்தார்.
மேலும், “இந்தப் போர் நடவடிக்கையால் சுமார் 1 கோடியே 20 லட்சம் உக்ரைன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். குறிப்பாக, அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு உக்ரைன் மக்கள் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். அதிகபட்சமாக, போலந்து நாட்டில் 36 லட்சம் பேர் குடியேறியிருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்திருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பா கண்டத்தில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய அகதிகள் இடப்பெயர்வு பிரச்னையாக இது பார்க்கப்படுகிறது.
ரஷ்ய தரப்பின் இழப்பு:
போர்த்தொடுத்தது ரஷ்யாதான் என்றாலும்கூட, ரஷ்ய தரப்பிலும் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அதாவது, இந்தப்போரில் கிட்டதட்ட 25,000 ரஷ்யப் படைவீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அதாவது, “ரஷ்யாவுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம். போரில் இதுவரை 24,900 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 1,110 பீரங்கிகள், 199 விமானங்கள், 155 ஹெலிகாப்டர்கள், 1,900 வாகனங்கள், 2,686 கவச வாகனங்கள், 502 வெடிகுண்டு வீசும் சாதனங்கள், எரிபொருள் டேங்குகள் என பெரிய அளவிலான ரஷ்யாவின் போர்த் தளவாடங்களை உருத்தெரியாமல் அழித்திருக்கிறோம்” என்கிறது உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம்.
மேலும், போர் தொடங்கியது முதல் தற்போது வரை ரஷ்யாமீது, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட உலக நாடுகள் சேர்ந்து சுமார் 5,831 தடைகளை விதித்திருக்கின்றன. இதனால், ரஷ்யாவின் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தனை இழந்த பின்பும் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது
உலகத் தரப்பின் இழப்பு:
ரஷ்யா-உக்ரைன் போரால் உலக அளவில் சுமார் 170 கோடி மக்கள் பசி, பட்டினி போன்ற வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஐ.நா. கவலை தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாகப் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளும் கோதுமை, பார்லியை 30% சதவிகிதம் உற்பத்தி செய்கின்றன. குறைந்த அளவில் வளர்ச்சியடைந்த 45 நாடுகள் மூன்றில் ஒரு பங்கு கோதுமையை ரஷ்யா மற்றும் உக்ரைனிடமிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன. 2022-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, கோதுமை மற்றும் சோளத்தின் விலை 30% சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை 60% சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்திருக்கிறது. அதேநேரத்தில் எரிவாயு, உரங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்திருக்கின்றன. இனியும் ரஷ்ய-உக்ரைன் போர் நீடித்தால் உலகில் உள்ள மனித இனத்தின் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமான மக்கள் அல்லது 170 கோடி மக்கள் பசி, பட்டினி மற்றும் வறுமைநிலைக்கு தள்ளப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
100 நாள்களைக் கடந்தும், மீட்டுருவாக்க முடியாத இழப்புகளைச் சந்தித்தபோதும் போர் தீவிரம் இன்னும் குறைந்தபாடில்லை! உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கும் ரஷ்யா, தங்கள் நாட்டில் இவானோவோ மாகாணத்தில் அணு ஆயுதப் படைகளைக்கொண்டு தீவிர போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உக்ரைன் நாட்டுக்கு சுமார் 700 மில்லியன் டாலர் மதிப்புடைய ராக்கெட் ஏவுகணைகள், வெடிமருந்துகள் அடங்கிய பாதுகாப்பு உதவி தொகுப்பை அமெரிக்கா வழங்கியிருக்கிறது.