தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கதாபாத்திரம். இதில் நடித்துள்ள வசந்தி நடியைல்ல நடனக் கலைஞர். நடனத்திலிருந்து நடிப்புக்கு வந்த அவரது திரைத்துறை அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்திருக்கிறார்.
“விக்ரம் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை கவனித்தீர்களா?
“எனக்கு எதுவுமே புரியலைன்னுதான் சொல்லணும். எல்லாருமே ‘சூப்பர் கா, மாஸ் கா’ சொல்றாங்க. காலை 4 மணிக்கு ஆரம்பிச்சு தொடர்ந்து போன் வந்துக்கிட்டே இருக்கு. சந்தோஷத்துல எனக்கு பசிக்கவேயில்ல. இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்குத்தான் நன்றி சொல்லணும்.”
விக்ரம் பட வாய்ப்பு எப்படி கிடைச்சது?
“நான் தினேஷ் மாஸ்டர்கிட்ட டான்சராக இருக்கேன். மாஸ்டர் படத்துக்கு தினேஷ் மாஸ்டர்தான் கொரியோகிராபர். அப்படிதான் எனக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜைத் தெரியும். விக்ரம் படத்தில் நான் நடிக்கணும்னு தினேஷ் மாஸ்டர்கிட்ட கால் பண்ணி லோகேஷ் கனகராஜ் கேட்டிருக்கார். அவர் என்கிட்ட வந்து சொல்லும்போதே இயக்குநரின் பெயரைக் கேட்டதும் சம்மதம் சொல்லிட்டேன். கமல் சார் படத்துல நடிக்கப்போறேன்னு சொன்னதும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. கேமரா முன்னாடி பலமுறை ஆடியிருக்கேன். ஆனால் நடிக்கிறது இதுதான் முதல் முறை. அதனாலேயே ஒரு பெரிய பதட்டம் இருந்துச்சு. பகத் சாரும், இயக்குநரும் தான் எனக்கு பாசிட்டிவான வார்த்தைகளைச் சொல்லி நடிப்பின் மீதான் பயத்தை போக்கினாங்க.”
நீங்க ஒரு டான்சர். அப்படியிருக்கும் போது உங்களுக்கு சம்மதமே இல்லாத ஸ்டன்ட் சீன்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்க சொல்லும்போது எப்படி இருந்தது?
“எனக்கு எல்லாத்தையும் இயக்குநர் முன்னாடியே சொல்லிட்டாரு. ஆனாலும் ஆரம்பத்தில் எனக்கு பயமாதான் இருந்துச்சு. இயக்குநர் தான், ‘பயப்படாதிங்க கா, பயம்தான் உங்களைக் கொல்லும்’ னு சொல்லி என்னை ஊக்கப்படுத்துவார். நான் சண்டை போடும் போதெல்லாம் அதை நோட் பண்ணி சொல்வார். ‘படம் ரிலீஸ் ஆனதும் பாருங்க, உங்களுக்கு அவ்ளோ நல்ல பெயர் கிடைக்கும்னு’ சொல்லிட்டே இருப்பாரு. சண்டை காட்சிகள்ல நடிக்கிறப்போ, உண்மையாவே நான் அடிச்சிட்டேன். அதனால ரிகர்சலுக்கு வரவே பயப்படுவாங்க. அப்புறம், ‘எனக்கு இது தான்டா முதல் தடவை. சாரி டா’ ன்னு சொல்லி சமாதானப்படுத்துவேன்.”
கமல்ஹாசன் எதாவது சொன்னாரா?
“படபிடிப்புல என்னோட முதல் சீனே கமல் சாரைத் தூக்கிட்டு போய் பெட்ல படுக்க வைக்கிறதுதான். அவரைத் தூக்குறப்பவே எனக்கு கை, கால் எல்லாம் உதற ஆரம்பிச்சிருச்சு. அவர் அவ்வளவு பெரிய நடிகர். அவர்கூட நான் நடிப்பேன்னு நினைச்சுகூட பாக்கல. இது ஏதோ கனவு மாத்தி இருக்கு. நான் வர்ற அந்தச் சண்டைக்காட்சியை இயக்குநர் கமல் சார்கிட்ட காட்டியிருக்கார். அதைப் பார்த்துட்டு கமல் சார் என்னைப் பாராட்டினார். அன்னைக்கு நைட் முழுக்க `கமல் சார்கிட்ட நான் பேர் வாங்கிட்டேன்னு’ வீட்டுல சொல்லிக்கிட்டே இருந்தேன்.”
நீங்க டான்ஸரா இருந்தப்போ நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் இருக்கா?
“விஜய் சாரோட பகவதி படத்துல வர்ற `அல்லு அல்லு…’ பாட்டுல ஒரு சின்ன ரோல் பண்ணியிருந்தேன். அதில் ஆரஞ்ச் கலர் டிரெஸ் போட்டிருந்தேன். அதே சமயத்துல அஜித் சார் நடிச்ச வில்லன் படத்துலையும் ஆடணும். அதிலும் அதே மாதிரி காஸ்ட்யூம் தேவைப்பட்டதால, அதே டிரெஸ்ல ஆடினேன். அதைப் பார்த்துட்டு விஜய் சார் என்கிட்ட “ஏங்க நீங்க ரெண்டு படத்துலையும் ஒரே காஸ்ட்யூம்ல ஆடியிருக்கிங்க’ன்னு கேட்டார்.”
இதைப்போல இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை இந்த வீடியோ நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் வசந்தி.