Tamilnadu TET exam syllabus and preparation tips in Tamil: ஆசிரியர் கனவோடு இருக்கும் பலரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் டெட் தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் எப்படி தயாராவது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஆக விருப்பம் உள்ளவர்கள், கட்டாயம் இந்த தேர்வு எழுதி, தகுதி மதிப்பெண்ணைப் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும் நடைபெறும்.
முதல் தாள் எழுதுவதற்கு, 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) முடித்திருக்க வேண்டும்.
இரண்டாம் தாள் எழுதுவதற்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) அல்லது ஆசிரியர் பயிற்சியில் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுத தகுதியுள்ளவர்கள் முதல் தாளையும் எழுதலாம்.
தேர்வு முறை
முதல் தாள் : 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 150 வினாக்கள் கேட்கப்படும். இதில்
குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் (Child Development and Pedagogy) – 30
மொழிப்பாடம் – 30 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்துக் கொள்ளலாம்).
ஆங்கிலம் – 30
கணிதம் – 30
சுற்றுச்சூழல் கல்வி – 30
இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.
பாடத்திட்டம்
குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 6 – 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.
மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.
ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.
கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள்: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.
இரண்டாம் தாள் : 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 150 வினாக்கள் கேட்கப்படும். இதில்
குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் (Child Development and Pedagogy) – 30
மொழிப்பாடம் – 30 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்துக் கொள்ளலாம்).
ஆங்கிலம் – 30
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு – 60
இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.
பாடத்திட்டம்
குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 11 – 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.
மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.
ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.
முழுமையான பாடத்திட்டத்தை தெரிந்துக் கொள்ள கீழ்கண்ட இணையதளப் பக்கங்களைப் பார்வையிடுங்கள்.
தாள் 1 : http://www.trb.tn.nic.in/TET_2022/16042022/TNTET%20Paper%20I.pdf
தாள் 2 : http://www.trb.tn.nic.in/TET_2022/16042022/TNTET%20Paper%20II.pdf
டெட் தேர்வுக்கு தயாராவது எப்படி?
இந்த தேர்வுக்கு 6 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். பேப்பர் 2 எழுதுபவர்கள் கூடுதலாக தாங்கள் தேர்ந்தெடுத்த பாடங்களையும் தனியாக படித்துக்கொள்ள வேண்டும்.
இவற்றில் பெரும்பாலானவர்களுக்கு கடினமாக உள்ள பகுதி உளவியல் தான். உளவியல் பாடங்களை படிக்கும்போது, புரிந்து படித்துக் கொள்வது அவசியம். இதில் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு, குழந்தை மேம்பாட்டின் 5 தியரிகள், ஆளுமை, ஊக்கப்படுத்தல் மற்றும் கற்பித்தல் ஆகிய பாடங்களை படித்துக் கொள்ள வேண்டும்.
தமிழில் இலக்கணம், செய்யுள், உரைநடை என பிரித்து படித்துக் கொள்ளுங்கள். இதற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் புத்தகத்தைப் படித்துக் கொள்ளுங்கள். இலக்கணப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலும் இலக்கணம் சார்ந்த வினாக்கள் கேட்கப்படுவதால் அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். பின்னர் ஆங்கில பாடங்களை எவ்வாறு நடத்துவது என்பது சார்ந்த பகுதியை படித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: TNPSC Group 4 VAO தேர்வு; இப்படி படிங்க… 180+ கொஸ்டின் உறுதி
கணிதத்தைப் பொறுத்தவரை 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிப்பது போதுமானது. கணிதத்தில் எண்ணியல், அளவியல், இயற்கணிதம், வாழ்வியல் கணிதம், சூத்திரம், முகடு, வீச்சு போன்ற பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்துக் கொள்ளுங்கள். வடிவியல், பேப்பர் 2ல் கணிதத்தை எடுத்தவர்கள் சிலபஸூக்கு ஏற்றவாறு தயாராகிக் கொள்ளுங்கள்.
அதேபோல் மற்றும் அறிவியல் பகுதிக்கு 6 முதல் 10 வகுப்பு வரையிலான பாடங்களை படிக்க வேண்டும். இதில் சுற்றுச்சூழல், உயிரினங்கள், குடும்பம், உணவு, ஆரோக்கியம், விவசாயம் மற்றும் மண், நீர், ஒலி, ஒளி, வெப்பம், அளவீடு, இயக்கம், ஆற்றல் மூலங்கள், ஆகிய பாடங்களை படித்துக் கொள்ள வேண்டும். சமூக அறிவியலுக்கு 6-10 வகுப்பு பாடங்களோடு, கூடுதலாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களை படிக்க வேண்டும். சமூக அறிவியலில், வரலாறு, இந்திய தேசிய இயக்கம், அரசியலமைப்பு, புவியியல் பாடங்களை சிலபஸூக்கு ஏற்றவாறு படித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு படித்து தயாரானால் எளிதில் தேர்வில் வெற்றி பெறலாம்.