புதுடெல்லி: குமரி முதல் காஷ்மீர் வரை நடத்தப்பட உள்ள யாத்திரைக்கான ஏற்பாடு குறித்து, ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் தொடர் தோல்வி, உட்கட்சி பூசல், மூத்த தலைவர்கள் அதிருப்தி என பல்வேறு காரணங்களால் தள்ளாட்டம் கண்டுள்ள காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் ‘சிந்தனை அமர்வு’ மாநாடு நடந்தது. இதில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த மாநாட்டில், கட்சியை பலப்படுத்தும் வகையில் ‘பாரத் ஜோடா யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் 2ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இது நடைபெற உள்ளது. இந்த யாத்திரைக்கான ஒருங்கிணைப்பாளர் திக்விஜய் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய திட்டக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ராகுல் காந்தி எம்.பி, ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர், ஜோதிமணி, பி வி ஸ்ரீனிவாஸ், நெட்டா டிசோசா, நீரஜ் குந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். கூட்டத்தில் யாத்திரையின் முக்கிய நோக்கம், மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கருத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.