இந்தியாவில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவது, நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி, மேற்கண்ட மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 4,500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 4,518 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,81,335 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில், 2,779 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,26,30,852 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் மரணம் அடைந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,701 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 25,782 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 194.12 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில், ஜூன் மாதத்ததில், கொரோனா வைரஸ் தொற்றின் நான்காம் அலை தாக்கக் கூடும் என, ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.