முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் யார் தலைமை வகிப்பது என்பதில் போராட்டம் ஏற்பட்டது. ஒரு வழியாக பொதுச்செயலாளர் பதவியை அப்படியே விட்டுவிட்டு தலைமையை இரண்டாக பிரித்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இருந்து வருகிறார்கள். மற்றொருபுறம் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவோ தானே கட்சியின் பொதுச்செயலாளர் எனக் கூறி காரில் கட்சி கொடியுடன் வலம்வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அதிமுக-வின் தலைமை குறித்த பிரச்னை அவ்வப்போது எழுவதும் அடங்குவதுமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மீண்டும் அ.தி.மு.க வின் தலைமை குறித்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் ஒ.பன்னீர்செல்வம் இல்லம் செல்லும் சாலை மற்றும் ஒ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி எம்.பி.,யுமான ஒ.பி.ரவீந்திரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும், `விரைவில் அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் தேனி மாவட்ட அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியினர் சிலரிடம் பேசினோம். போஸ்டர் ஒட்டிய சுரேஷ் பெரியகுளம் ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர். தற்போது அதிமுக-வில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. சாதாரண தொண்டனாக மட்டுமே இருக்கிறார். இவருடைய தந்தை ஒபிஎஸ் பெரியகுளம் நகராட்சி தலைவராக இருந்தபோது வார்டு செயலாளராக இருந்துள்ளார்.
ஏற்கெனவே ஒபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியது, அதில் உறுதியாக இல்லாமல் பின்வாங்கியது, சசிகலா, தினகரன் இணைப்புக்கு தீர்மானம் போட்டுவிட்டு அதிலும் உறுதியாக இல்லாமல் பின்வாங்கியது, உள்ளூரில் பெரிய அளவில் கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டாமல் இருப்பது போன்ற காரணங்களால் சொந்த ஊர், சொந்த தொகுதி நிர்வாகிகளே பெரும் அதிருப்தியில் உள்ளனராம். அதற்கான சிறு வெளிப்பாடு தான் இந்தப் போஸ்டர் விவகாரம்’ என்கிறார்கள்.