விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் வசித்துவருகிறார் செஞ்சி ராஜா (45). இவர், அகில இந்திய இந்து மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார். இவரது தொலைபேசிக்கு,மூன்று தொலைபேசி எண்களிலிருந்து தொடர்புகொண்ட மர்ம நபர்கள், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அப்போது, “வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரும் (பெயரைக் குறிப்பிட்டு), அவர் மகனும் உன்னைக் கொலைசெய்யச் சொல்லி ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்துவிட்டனர். உன்னைக் கொலைசெய்வது உறுதி” என்று கூறி மிரட்டியதாகவும் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
மேலும், நேற்று மாலை மூன்று மணியளவில், தேசூர்பாட்டை பகுதியில் ராஜாவின் காரை வழிமறித்த அடையாளம் தெரியாத இருவர், “வெடிகுண்டு வீசிக் கொலைசெய்துவிடுவோம்” என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் புகாரில் ராஜா குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட செஞ்சி காவல்துறையினர், இது குறித்து சி.எஸ்.ஆர் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக செஞ்சி காவல் ஆய்வாளர் தங்கம் என்பவரைத் தொடர்புகொண்டு பேசினோம். “இதுவரையில், மேற்கொண்டு எந்த விவரமும் கிடைக்கவில்லை. விவரங்கள் தெரியவரும் பட்சத்தில் கூறுகிறோம்” என்றார்.