மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் கேக் வெட்டி கொண்டாடும் கணவன்மார்களுக்கு மத்தியில் கையை வெட்டி ஒளித்து வைத்த கொடூர சம்பவம் கொல்கத்தா அடுத்த கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.
அங்குள்ள கேதுகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஷரீபுல். இவரது மனைவி ரேணுகாதுன். தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரேணுகாவுக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேருவதற்கு பணி ஆணை கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார்.
அரசு வேலை கிடைக்கும் செய்தி கணவருக்கு மகிழ்ச்சியைத் தரும் என எதிர்பார்த்திருந்த நிலையில், கணவர் ஷரீபுல் அவரை அரசு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.
ஆனால் ரேணு காதுன், கணவன் பேச்சைக் கேட்க மறுத்து வேலைக்குச் செல்வதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே அரசு வேலையில் சேருவது தொடர்பாக மீண்டும் சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஷரீபுல் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளான்.
நள்ளிரவில் மனைவி உறங்கியதும் நண்பர்களுடன் வீட்டுக்குள் புகுந்த ஷரிபுல். நண்பர்களை ஏவி மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி சத்தம் போடாமல் செய்துள்ளான்.
வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியின் கையை துண்டாக வெட்டியுள்ளான். துண்டாகிய கையை இணைத்து ஆபரேஷன் செய்துவிடக்கூடாது என்பதற்காக, துண்டான கையை எடுத்துச்சென்று ஒளித்து வைத்துள்ளான்.
வலியால் துடித்த ரேணுகாதுன் அண்டை வீட்டார் மற்றும் அவரது சகோதரர் துணையுடன், சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து அவர் பர்த்வானில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கையிருந்தால் பொறுத்திவிடலாம் என்று கூறி மருத்துவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தலைமறைவான கணவர் ஷரிபுல், அவரது பெற்றோர் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் தேடத் தொடங்கியுள்ளனர், அவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர்.
மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற சந்தேகத்தில் அரசு வேலையில் சேர்வதை தடுக்கவே அவரது கையை வெட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.