சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறையின் ஆய்வுக்கு ஒத்துழைப்பதுதான் மனுநீதி, மனுதர்மம்! என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, “எந்த விதமான பிரச்னை இல்லையென்றால் ஆய்வு செய்ய வருபவர்களுக்கு ஒத்துழைப்பது தான் நீதி! மனுநீதி, மனுதர்மம்! அந்த வகையில் தீட்சிதர்களுக்கு வைக்கின்ற அன்பாக கோரிக்கை உங்கள் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறை எடுக்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள் அல்ல! ஆய்வு செய்வது தீட்சிதர்களுக்கு எதிரான செயல் என்றும் நினைக்க வேண்டாம்.
திருக்கோயில் இணை ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு, அவர்கள் கேட்கின்ற விளக்கங்களை அளிப்பதுதான் சட்டத்தின்படி உகந்ததாக இருக்கும் என்பதை நான் அன்போடு தீட்சிதர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நிச்சயம் சட்டத்தை மீறி நாங்கள் எந்தவிதமான செயலிலும் ஈடுபடமாட்டோம் என்ற உறுதியளித்த பிறகும் இன்றைக்கு ஆய்வு செய்ய மறுப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. வருகின்ற புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி ஆய்வுகள் மேற்கொள்ளும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM