'இந்தியன் 2' படத்தை 'டேக் ஓவர்' செய்யும் உதயநிதி ஸ்டாலின்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்க 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரம்மாண்டமாக ஆரம்பமான படம் 'இந்தியன் 2'. 2020ம் ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் மூவர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு வந்தது. அதற்கடுத்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையில் பிரச்சினை வர நீதிமன்ற வழக்கு வரை சென்றது. கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகாமல் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் 'விக்ரம்' பட பத்திரிகையாளர் சந்திப்பின் போது 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என கமல்ஹாசன் அறிவித்தார். படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலுவையும் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற 'டான்' பட சக்சஸ் மீட்டின் போது தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் 'இந்தியன் 2' படம் பற்றி ஒரு அப்டேட் கொடுத்தார்.
“சுபாஷ்கரன் சார் கிட்ட நேற்றில் இருந்து பேசிக்கிட்டிருக்கோம். விரைவில் 'இந்தியன் 2' படத்தின் வேலைகளை ஆரம்பிக்கப் போகிறோம்” என்று அறிவித்தார்.
'இந்தியன் 2' படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. உதயநிதி நேற்று அறிவித்ததைப் பார்த்தால், அவரது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் 'இந்தியன் 2' படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளது போல் தெரிகிறது.
கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்தை உதயநிதி ஸ்டாலின் தான் வெளியிட்டார். எனவே, 'இந்தியன் 2' படத்தை மீட்டெடுக்க, லைகாவின் சுபாஷ்கரன், உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து முடிவெடுத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. உதயநிதியே களத்தில் இறங்கியுள்ளதால் ஷங்கர் எந்த தாமதமும் இல்லாமல் படத்தை முடித்துக் கொடுத்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி முடித்துவிட்டு 'இந்தியன் 2' படம் பக்கம் மீண்டும் வருவார் ஷங்கர் என்கிறார்கள்.
கமல்ஹாசனின் அடுத்த வெளியீடாக 'இந்தியன் 2' படம் இருக்க வாய்ப்புகள் அதிகம்.