Tamil Nadu Tamil News: 37வது நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டம் தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு மொழியாக ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், இந்தி ஆங்கிலத்திற்குத் தான் மாற்றே தவிர உள்ளூர் மொழிகளுக்கு அல்ல என்றும் கூறியிருந்தார்.
மத்திய அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. எதிர்கட்சினர் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மத்திய அரசு மீண்டும் இந்தியைத் திணிக்க முயல்கிறது என்று கூறி பலரும் சாடி பேசினர். அதோடு, நாட்டிலுள்ள பல்வேறும் மாநிலங்களில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு கட்சியினரும் தங்களின் வலுவான இந்தி எதிர்ப்பை அறிக்கை வாயிலாகவும், கண்டங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினர்.
டிகேஎஸ் இளங்கோவன் கருத்து
இது குறித்து சென்னையில் கடந்த சனிக்கிழமை திராவிடர் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேசிய திமுக மூத்த தலைவர் டிகேஎஸ்.இளங்கோவன், இந்தி மொழி என்பது வளர்ச்சியடையாத மாநிலங்களின் மொழி. அது நமக்கு எந்த நன்மையும் செய்யாது, அது நம்மை ‘சூத்திரர்’ போன்ற அடிமைகளாக்கும். நாம் மனிதனாக இருக்க வேண்டுமானால் அதை எதிர்க்க வேண்டும்”என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற வளர்ச்சியடையாத மாநிலங்களில் இந்தி தான் தாய்மொழியாக உள்ளது. மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு, ஒடிசா, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. இந்த மாநிலங்கள் அனைத்தும் வளர்ந்த மாநிலங்களாக உள்ளன.
நான் அந்த மொழியைப் பற்றி மட்டுமே எனது கருத்தைத் தெரிவித்தேன். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் வளர்ச்சிக்கு இந்தி மொழி உதவவில்லை. நான் நானாக எதுவும் கூறவில்லை. நம்மிடம் இருக்கும் தரவுகளை வைத்தே நான் இப்படிக் கூறினேன்.
இந்தி என்ன செய்யும்? அது நம்மைச் சூத்திரர்களாக மாற்றிவிடும். அது நமக்கு எந்த நன்மையும் செய்யாது. நான் உங்களுக்குச் சொல்கிறேன். வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் தாய்மொழி எதுவும் இந்தி இல்லை. வட இந்தியாவில் மக்கள் சூத்திரர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த மனுதர்மம் மக்களைப் பிளவுபடுத்துவதால் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகளும் இப்போது திராவிட மாடலை கையில் எடுத்துள்ளன.
வட இந்தியாவில் மனுதர்மம் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் எப்படி சூத்திரர்கள் ஆக்கப்பட்டனரோ, அதேபோல இந்தி மொழி திணிக்கப்பட்டால், அடுத்து அந்த கலாசாரமும் திணிக்கப்படும். மொழியை நம் மீது திணித்தால், அது கலாச்சாரத்தைத் திணிக்கும் ஒரு முயற்சி. அதன் பின்னர் நாமும் சூத்திரர்களாக ஆக்கப்படுவோம்” என்று அவர் தெரிவித்து இருந்தார்.
பாஜக கண்டனம்
இந்நிலையில், திமுகவின் மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவனின் இந்தி எதிர்ப்புக் கருத்துக்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “அரசியலின் ஜென்டில்மேன் என்று அழைக்கப்படும் ஒருவர் இந்தி பேசும் மக்களை இழிவுபடுத்தியது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. கடந்த ஓராண்டில் ஏற்பட்ட தோல்விகளை மறைத்து, புதைக்க, தமிழக மக்களை இவ்வாறு தூண்டிவிட்டு, திமுகவினர் நடத்திய சதி கடும் கண்டனத்துக்குரியது. தி.மு.க.,வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசின் ஊழலை அம்பலப்படுத்தி வருவதால், தி.மு.கவினர் ‘பா.ஜ.கவை கண்டு பயப்படுகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னேறாத மாநிலங்களின் மொழி ‘ஹிந்தி’. ஹிந்தியை பின்பற்றினால் ‘சூத்திரர்களாகி’ விடுவோம் : டி கே எஸ் இளங்கோவன், தி மு க.
மொழி அரசியல் செய்து வந்த தி மு க மொழியோடு சாதியை இணைத்து அரசியல் செய்ய முனைவது பிரிவினை கருத்துகளை விதைப்பதற்கே. நீதிக்கட்சியின் வழி வந்தவர்கள் என்று மார்தட்டி கொள்ளும் தி மு க இந்த பேச்சின் மூலம் தாங்கள் ‘தலித்’ மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு வருட ஆட்சியின் அவலத்தை மூடி மறைக்க, மொழியால், சாதியால் மக்களை தூண்டி விட்டு இந்தியாவை பிளக்க நினைக்கும் தி மு கவின் முயற்சி முறியடிக்கப்படும்.” என்றும் பதிவிட்டுள்ளார்.
மார்தட்டி கொள்ளும் தி மு க இந்த பேச்சின் மூலம் தாங்கள் ‘தலித்’ மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு வருட ஆட்சியின் அவலத்தை மூடி மறைக்க, மொழியால், சாதியால் மக்களை தூண்டி விட்டு இந்தியாவை பிளக்க நினைக்கும் தி மு கவின் முயற்சி முறியடிக்கப்படும்.(2/2)
— Narayanan Thirupathy (@Narayanan3) June 6, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil