மறதிக்குப் பழக்கப்பட்ட ஊர் நம்முடையது. எங்கு எப்போது எதை மறப்போம் எனத் தெரியாது. ஆனால் தொலைத்துவிட்டு பின்னர் தேடிக்கொண்டிருப்போம். `எங்க டாக்ஸியில் போகும்போது நீங்க இதையெல்லாம் இந்த நேரத்தில் மிஸ் பண்ணிட்டீங்க பாஸ்’ என உபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த உபர் (Uber) நிறுவனம், இந்தியாவில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணிக்க கார், பைக், ஆட்டோ போன்ற வாகனங்களை ஆப் வழியாக அணுகும் சேவையை வழங்கிவருகிறது.
ஒவ்வொரு வருடமும் Lost & Found Index என்கிற பெயரில் வாடகை வாகனங்களில் பயணிக்கும் மக்கள் தவறவிடும் பொருள்கள் பற்றிய அறிக்கையை உபர் வெளியிடும். அதில் எந்தெந்த நேரத்தில் மக்கள் அதிகம் தொலைக்கிறார்கள், எந்தப் பொருள்களை அதிகம் தொலைக்கிறார்கள், எந்த நகரம் அதிக மறதியைக்கொண்டது என்பதெல்லாம் தெரிய வரும்.
இந்த வருடத்திற்கான Lost & Found Index பட்டியலில் அதிகம் பொருள்களைத் தவறவிடும் நகரங்களில் மும்பை முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி இருக்கிறது.
பொதுவாகத் தொலைக்கும் போன், லேப்டாப், வாலட்ஸ், துணிகள் போன்ற பொருள்களைத் தவிர ஆதார் கார்டு, புல்லாங்குழல், டம்ப்பெல்ஸ், Ghewar ஸ்வீட்ஸ் போன்ற எப்போவாவது தொலைக்கும் பொருள்களும் அடக்கம்.
வாட்டர் பாட்டில், போன் சார்ஜர், பேக், ஸ்பீக்கர்ஸ், பைக் ஹாண்டில், கிரிக்கெட் பேட்கள், கல்லூரிச் சான்றிதழ்கள் இப்படி நம்ம மக்கள் தொலைக்கிற பொருள்களைப் பட்டியலிடும் ரிப்போர்ட்டில் எந்த நாளில் மறதி அதிகம் இருக்கிறது என்கிற சுவாரசியமான தகவலையும் உபர் சொல்கிறது.
கடந்த வருடத்தில் மார்ச் மாதம் அதிகம் மறதியுள்ள மாதம் என்கிறது உபர். மார்ச்சில் 17,24,25,30 மற்றும் 31 ஆகிய நாள்கள் அதிக முறை பொருள்களை மறந்து விட்டுச் சென்ற நாள்கள் என்கிறது உபர்.
ஒரு நாளின் மதிய நேரத்தில்தான் குறிப்பாக 1 மணி முதல் 3 மணி வரையிலான நேரத்தில் மறதி அதிகம் இருக்கிறதாம். (சாப்பிட்டுட்டு தூங்கிற நேரம் என்பதாலோ!)
உபர் பயணம் முடிந்த பிறகும் ஏதேனும் பொருளைத் தவற விட்டிருந்தால் மீண்டும் ஆப்பில் கோரிக்கை அனுப்பி அந்த வாகன ஓட்டியை அணுக முடியும் என்கிறது உபர். (தொலைத்தாலும் பிரச்னையில்லை!)