ஒரு விளம்பரம் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைகிறதோ, விளம்பரப்படுத்தப்படும் பொருளும் அந்த அளவுக்கு அமோகமாக விற்பனையாகும். விளம்பரங்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படித்தான் சமீபத்தில் லேயர் ஷாட் ( Layer’r shot) எனும் ஆண்களுக்கான வாசனை திரவியங்களை விற்பனை செய்யும் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதற்கு மக்களும் பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்நிறுவனம் மன்னிப்பு கோரி விளக்கமளித்துள்ளது.
ஜூன் 3 ஆம் தேதி இந்நிறுவனம் இரண்டு விளம்பரங்களை வெளியிட்டது. முதல் விளம்பரத்தில் நான்கு ஆண்கள் சூப்பர் மார்க்கெட்டில் நின்று கொண்டிருக்க அங்கு ஒரு பெண்ணும் பொருள்களை வாங்குவது போல ஒரு காட்சி…. அந்த ஆண்கள், “நாங்கள் நான்கு பேர், இங்கே ஒன்றுதான். யார் இந்த ஷாட்டை எடுக்கப் போகிறீர்கள்” என கேட்டதும் அந்தப் பெண் பதற்றமடைந்து திரும்புகிறார். ஆனால் அங்கே ஒரே ஒரு டியோடரன்ட் பாட்டில் காட்டப்படுகிறது. உடனே அந்தப் பெண் ஆறுதல் அடைந்ததுபோல பெருமூச்சு விடுகிறார். அந்த டியோடரன்ட்டை எடுத்து இதுதான் ஷாட் என்பதாக முதல் விளம்பரம் முடிகிறது.
இரண்டாவது விளம்பரத்தில், ஓர் ஆணும் பெண்ணும் அறையில் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள். திடீரென கதவைத் திறந்து அதிரடியாக உள்ளே நுழையும் நான்கு பேர், நாங்கள் ஷாட் எடுத்துக் கொள்ளலாமா என கேட்க, கட்டிலில் அமர்ந்திருந்த ஆண், ‘தாராளமாக’ என்பதுபோல் சைகை காட்டுகிறார். அந்தப் பெண் பதற்றமாகிறார். ஒருவன் நேராக நடந்து வந்து கட்டிலுக்கு பக்கத்தில் உள்ள லேயர் ஷாட் டியோடரன்ட்டை எடுக்க, அந்தப் பெண் நிம்மதியடைவதுபோல விளம்பரம் முடிகிறது.
இரட்டை அர்த்தம் தொனிக்கும் இந்த விளம்பரங்கள் பாலியல் வல்லுறவை ஊக்கப்படுத்துவது போல இருப்பதாக பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ப்ரியங்கா சோப்ரா, ரிச்சா சத்தா மற்றும் ஃபர்ஹான் கான் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த விளம்பரங்களை விமர்சித்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் மன்னிப்பு கோரி விளக்கமளித்தது. அதில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பே விளம்பரம் வெளியிடப்பட்டதாகவும், யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தவும், பெண்களின் ஒழுக்கத்தை சீர்குலைக்கும் கலாசாரத்தை ஊக்கப்படுத்தும் எண்ணத்திலும் விளம்பரம் வெளியிடப்படவில்லை என தெரிவித்தது.
ஜூன் 4-ம் தேதி முதல் இந்த விளம்பரத்தை வெளியிடாமல் நிறுத்துமாறு ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்கள் பெண்களை மோசமாக சித்தரிப்பதாகச் சொல்லி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ட்விட்டர் மற்றும் யூ டியூபில் இந்த விளம்பரத்தை நீக்குமாறு கூறி உள்ளது.
டெல்லி மகளிர் ஆணையம் இந்த விளம்பரம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் புகார் அளித்துள்ளது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜூன் 9-ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.