ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து தங்கள் நாட்டைக் காத்துக்கொள்ள போராடி வரும் உக்ரைனியர்களுக்கு, புதிதாக ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது.
ஆம், புதைக்க முடியாமல் குவிந்து கிடக்கும் உடல்கள் அழுகி, அவற்றிலிருந்து பரவும் கிருமிகள் நீர் நிலைகளில் கலந்து, மக்கள் குடிக்கும் நீர் வரை சென்று, இப்போது, காலரா என்னும் கொடிய தொற்றுநோய் பரவும் அபாயம் மரியூபோலில் இருக்கும் மக்களுக்கு உருவாகியுள்ளது.
போரில் கொல்லப்பட்ட உடல்களை பாதுகாத்து வைக்க குளிர்பதனப் பெட்டிகளும் இல்லை, புதைக்க வசதியும் இல்லை, எரிக்க மின்சாரமும் போதுமான அளவில் இல்லை. எனவே, உடல்கள் அழுகிக்கொண்டிருக்கின்றன.
அந்த அழுகிய உடல்களிலிருந்து பரவும் காலரா கிருமிகள், நீர் நிலைகளுக்குப் பரவ, மெதுவாக காலரா நோய் பரவிக்கொண்டிருக்கிறது.
மருந்துகளோ, மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்கான வசதியோ இல்லாத நிலையில், மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
ஏற்கனவே, மரியூபோல் நகரின் குடிதண்ணீர் குழாய்கள் தாக்குதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், காலரா பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு மே மாதத்தின் நடுப்பகுதியிலேயே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.