கீவ் : ரஷ்ய ராணுவத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து உக்ரைன் வீரர்கள் பதுங்கியிருந்த இரும்பு ஆலையில் இருந்து, உயிரிழந்த வீரர்களின் உடல்களை மீட்கும் பணி துவங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யப் படைகள் போரைத் துவக்கின.பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியபோதும், மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்ற முடியாமல் ரஷ்யப் படைகள் திணறின.இந்நகரில் உள்ள அசோவ்ஸ்டால் இரும்பு ஆலையில் பதுங்கியிருந்து, உக்ரைன் வீரர்கள் கடும் எதிர் தாக்குதல் நடத்தினர். நீண்ட இழுபறிக்குப் பின், கடந்த மாத இறுதியில், உக்ரைன் வீரர்கள் சரணடைந்தனர்.
இந்த ஆலையில் இருந்து, 2,500க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தனர். ரஷ்யப் படைகளிடம் சரணடைந்த அவர்களுடைய நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில், இரு ராணுவமும், போரில் உயிரிழந்த வீரர்களை சமீபத்தில் ஒப்படைத்தன. அதன்படி, இரு ராணுவமும் தலா, 160 பேரின் உடல்களை ஒப்படைத்தன.
இதற்கிடையே, இரும்பு ஆலையில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை கண்டெடுக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை, 25க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் தெரிகிறது.ரஷ்யப் படைகள் தாக்குதலின்போது, இந்த ஆலையில் எத்தனை வீரர்கள் உயிரிழந்தனர் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.முழுமையாக சேதமடைந்துள்ள அந்த ஆலையில் சிதறி கிடக்கும் வீரர்களின் உடல்களை மீட்டபிறகே, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விபரம் தெரியவரும் என கூறப்படுகிறது.
Advertisement