டெல்லி: டெல்லியில் உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் இன்று காலை 9.20 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உச்சநீதிமன்ற வளாகம் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்கும் வெளியில் ஈடுபட்டனர். மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.