புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 23 இல் நடைபெறுகிறது. இதில் சமாஜ்வாதிக்கு ஆதரவளித்துள்ள காங்கிரஸ் அக்கட்சியுடன் 2024 மக்களவை தேர்தலை கூட்டணிக்கு முயல்வதாகத் தெரிகிறது.
கடந்த மார்ச்சில் முடிந்த உபி சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதியின் தலைவர்களான அகிலேஷ்சிங் யாதவும், ஆஸம்கானும் எம்எல்ஏவாக தேர்வாகினர். இதனால், இருவரும் தனது ஆஸம்கர் மற்றும் ராம்பூர் மக்களவை தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர்.
தொடர்ந்து அவ்விரண்டு தொகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலின் மனுதாக்கல் நேற்றுடன் முடிந்தது. உபி எதிர்கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்(பிஎஸ்பி), ஆளும் கட்சியான பாஜக ஆகியோர் தங்கள் வேட்பாளர்களை போட்டியிட வைக்கின்றனர்.
இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருப்பது மாயாவதியின் பிஎஸ்பியின் வழக்கம். ஆனால், இந்தமுறை மாயாவதி ஆஸம்கரில் மட்டும் தனது வேட்பாளரை போட்டியிட வைத்துள்ளார்.
அவரது இந்த செயல், பாஜகவுடன் ரகசியக் கூட்டு வைத்து ஆஸம்கரில் சமாஜ்வாதியை தோற்கடிப்பது எனத் தெரிகிறது. மற்றொரு முக்கியக் கட்சியானக் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை இருதொகுதிகளிலும் நிறுத்தவில்லை.
மாறாக தனது ஆதரவை சமாஜ்வாதிக்கு அளிப்பதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 2010 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பான இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் தனது ஆதரவை சமாஜ்வாதிக்கு அளித்துள்ளது.
இதன் பிறகு 2017 இல் வந்த சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிட்டது. எனவே, இந்தமுறை ஆதரவிற்கு பின் 2024 இல் வரும் பொதுத்தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் குறி வைப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
அகிலேஷ் ராஜினாமா செய்த ஆஸம்கரில் முஸ்லீம் மற்றும் யாதவர் வாக்குகள் அதிகம் உள்ளன. இதை பிரிக்க மாயாவதி, தலீத் பிரிவை சேர்ந்த பிரபல முஸ்லீம் தலைவரான ஷாஆலம் குட்டு ஜமாலியை வேட்பாளராக்கி உள்ளார்.
ஆஸம்கரில் பாஜக, போஜ்புரி மொழி திரைப்படத்தின் பிரபல நடிகரான தினேஷ் லால் யாதவிற்கு மறுவாய்ப்பு அளித்துள்ளது. இதற்கு ஆஸம்கரில் போஜ்புரி மொழி பேசுபவர்கள் அதிகம் வசிப்பதும் காரணம்.
முஸ்லீம்கள் அதிகமுள்ள ஆஸம்கானின் ராம்பூரில் பாஜக சார்பில் கன்ஷியாம் லோதி போட்டியிடுகிறார். முஸ்லீம்கள் அதிகமுள்ள இவ்விரண்டு தொகுதிகளிலும் சமாஜ்வாதிக்கு தோல்வி என்பது 2024 மக்களவை தேர்தலில் பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
சமாஜ்வாதியை உபி முஸ்லீம்கள் புறக்கணித்து விட்டதாகப் புகார் எழும். இச்சூழலில் காங்கிரஸின் ஆதரவு அகிலேஷுக்கு பலன் தரும் வாய்பாக உள்ளது.
இதற்கு அஞ்சியே அகிலேஷ் தொகுதியில் அவரது மனைவியான டிம்பிள் யாதவை போட்டியிட அமைத்த திட்டம் கடைசி நேரத்தில் ரத்தானதது. இவருக்கு பதிலாக தனது ஒன்றிவிட்ட சகோதரனும் முன்னாள் எம்.பியுமான தர்மேந்திர யாதவ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அதேபோல், ராம்பூரிலும் ஆஸம்கானின் மனைவியும் முன்னாள் எம்.பியுமான தன்ஜீம் பாத்திமா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இவரது தோல்விக்கு அஞ்சி தனது நெருக்கமான ராம்பூர் மாவட்ட சமாஜ்வாதி தலைவர் அஸிம் ராசா வேட்பாளராக்கப்பட்டு உள்ளார்.
இந்த முஸ்லீம் தொகுதிகளை கைப்பற்றுவதும் ஒரு காரணமாக, அவர்களது இறைத்தூதர் நபியை விமர்சித்த நுபுர் சர்மா, ஜிண்டால் ஆகியோர் மீது பாஜக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கருதப்படுகிறது.