சென்னை: கர்ப்பிணிகளுக்கான தாய்-சேய் ஊட்டச்சத்து பெட்டகத்தில் வழங்கப்படும் இரும்பு சத்து டானிக் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதில்: அம்மா தாய்சேய் ஊட்டச்சத்து பெட்டகத் திட்டம் 2018 -ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஒவ்வொரு பெட்டகமும், ரூ.2,000 மதிப்பிலான 8 வகையான பொருட்களை உள்ளடக்கி இருக்கும். இதில் இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சிரப்பும் ஒன்றாகும். இதன் கொள்முதல் விலை 200 மி.லி. பாட்டில் ஒன்று ரூ.74.66 (வரிகள் உட்பட). அம்மா தாய்சேய் ஊட்டச்சத்து பெட்டகத்தில் மூன்று 200 மி.லி பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே மூன்று பாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.224. ஆனால் செய்தி குறிப்பில் அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பொருட்டு ஒரு பாட்டில் (200 மி.லி) ரூ.224-க்கு கொள்முதல் செய்வதாக அடிப்படை ஆதாரமற்ற மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கர்ப்பிணிகளுக்கான தாய் – சேய் நல பெட்டகத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடர், இரும்புச் சத்து டானிக்கை ஆவினை நிராகரித்து தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்படுகிறது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.