எனக்கும், தமன்னாவுக்கும் பிரச்சனையா ? மனம்திறந்த எப்-3 இயக்குனர்
தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் அனில் ரவிபுடி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது இயக்கத்தில் உருவான எப்-3 திரைப்படம் வெளியானது. வெங்கடேஷ், வருண் தேஜ் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட்டான எப்-2 படத்தின் சீக்குவலாக இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் கதாநாயகிகளாக தமன்னா, மெஹரின் பிர்ஷாடா இருவரும் நடித்திருந்தனர். இந்த மூன்றாம் பாகத்தில் போனஸாக பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு நடனம் ஆடியிருந்தார்.
இந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் எதிலும் தமன்னா கலந்து கொள்ளவில்லை. இதனால் இயக்குனருக்கும், தமன்னாவுக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு என்று அந்த நேரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது வெளிப்படையாகவே தமன்னாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை என்று இயக்குனர் ரவியுடன் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அனில் ரவிபுடி, 'எங்கள் இருவருக்கும் மிகப்பெரிய சண்டை என எதுவும் இல்லை. இந்த படத்தில் தமன்னா நடிக்கும் சில முக்கியமான காட்சிகளை படமாக்கி கொண்டிருந்தபோது, ஒருநாள் அவரது காட்சிகளை முடித்து விட்டு செல்லுமாறு கூறினேன். அவரோ மறுநாள் வேறு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவசரமாக கிளம்புவதாக கூறினார். இதனால் இருவருக்கும் அப்போது சற்றே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் நான்கு நாட்களில் அது சரியாகி வழக்கம்போல என்னிடம் பேச ஆரம்பித்தார் தமன்னா. அதேசமயம் இந்த கோபத்தினால் தான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது உண்மை அல்ல. அந்த சமயத்திலும் அவருக்கு வேறு படத்தின் படப்பிடிப்பு இருந்தது தான் காரணம்” என்று விளக்கம் கூறியுள்ளார் அனில் ரவிபுடி