திரிணாமுல் காங்கிரஸின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தைப் பிரிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று காட்டமாகப் பேசியிருக்கிறார். முன்னதாக பா.ஜ.க-வைச் சேர்ந்த மேற்கு வங்க மாநிலத்தின் வடபகுதி எம்.பி-யான ஜான் பர்லா, வங்காளத்திலிருந்து வடக்குப் பகுதியைப் பிரித்துத் தனி மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். ஜான் பர்லாவின் இத்தகைய கோரிக்கைக்கு அப்போதே அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் வடபகுதி மாவட்டமான அலிபுர்துவாரில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய மம்தா, “தேர்தலுக்கு முன்னர் அவர்கள் என்ன சொன்னார்கள்… கூர்க்காலாந்தை உருவாக்குவோம் என்றார்கள். இதை அவர்கள் சொல்லவில்லையா… மலைகளுக்கும் சமவெளிக்குமிடையில் அவர்கள் பிளவுகளை உருவாக்க முயன்றார்கள். ஆனால், ஒருபோதும் நான் அதை அனுமதிக்க மாட்டேன். அத்தகைய பிரிவுகள் எதுவும் எங்களுக்கு வேண்டாம். மலைகளிலும் சமவெளியிலும் உலவும் மக்கள் எங்களின் சொந்தங்கள். ரவீந்திரநாத் தாகூரையும், நஸ்ருல் இஸ்லாத்தையும் பிரிக்க முடியுமா… என் ரத்தத்தைக்கூடத் தர தயாராக இருக்கிறேன் நான். ஆனால், எந்தக் காரணத்துக்காகவும் வங்காளத்தைப் பிரிக்க அனுமதிக்க மாட்டேன்” என்றார் காட்டமாக.