கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இமாச்சல பிரதேசத்தில் 3 நாட்களுக்கு மேலாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு!

சிம்லா : நாடு முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் வரும் நிலையில், குளிர்பிரதேசமான ஹிமாச்சல பிரதேசத்தில் 37 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி இருப்பது அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமான மலைப் பகுதியான தர்மசாலாவில் நேற்றைய வெப்பநிலை 37.5 டிகிரி செல்ஷியஸாக பதிவாகி உள்ளது. கடைசியாக 2009ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அங்கு வெப்பநிலை மிகவும் அதிகரித்து காணப்பட்டதாக சிம்லா வானிலை மைய இயக்குனர் சுரேந்திர பால் கூறியுள்ளார். மாநிலத்தில் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் செவ்வாய்க்கிழமையும் வெப்பநிலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மைய இயக்குனர் கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டி உள்ளது. உனாவில் அதிகபட்சமாக 44.2 டிகிரி செல்ஸியஸ் பதிவானது. சிர்மூரில் உள்ள தெளலகுவானில் 40.7 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது. பாலம்பூரில் மற்றும் டல்ஹவுஸியில் முறையே 34.5  டிகிரி செல்ஸியஸ், நர்கண்டா மற்றும் குஃப்ரியில் 22.9 டிகிரி செல்ஸியஸ் மற்றும் 22.7 டிகிரி செல்ஸியஸ் என வெப்பநிலை பதிவாகி உள்ளது. இன்று மலைப்பகுதிகளில் லேசான மழையும் உயரமான மலைப்பகுதியில் மழையும், பனியும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.