புதுடில்லி : ‘விசா’ முறைகேடு தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.தமிழகத்தைச் சேர்ந்தவரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம், 2011ல் மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த 263 பேருக்கு, சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான கார்த்தி, தன் தந்தையின் உதவியுடன் இந்த விசாவை பெற்றுத் தந்ததாகவும், இதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் சி.பி.ஐ., தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதில் நடந்துள்ள சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றது. இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு, கார்த்தி தாக்கல் செய்த மனுவை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.அதையடுத்து கார்த்தி உள்ளிட்டோர் டில்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வருவதாக இருந்தது.ஆனால், அமலாக்கத் துறை வழக்கறிஞர் ஆஜராக முடியாததால், விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Advertisement